டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், கூடுதல் டிஜிபி கே.சங்கர்.
சென்னை: தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பிய சம்பவம் பெரும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ள நிலையில், சிறைத்துறை இயக்குநராக இருந்த டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் மாற்றப்பட்டு, கூடுதல் டிஜிபி கே.சங்கர், சிறைத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தேனி மாவட்ட சிறையிலிருந்து 17 கைதிகள் சிறைக் காவலர்களைத் தாக்கிவிட்டு தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதற்கு முன்பு சென்னை புழல் சிறையில் இருந்து நேபாள நாட்டைச் சேர்ந்த கைதி உள்பட 2 பேர் தப்பிச் சென்றனர். அடுத்தடுத்து நடைபெற்ற இந்தச் சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.
தப்பியவர்கள் கைது செய்யப்பட்டாலும், இந்தச் சம்பவங்களைச் சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் அரசுக்கு எதிராகக் குரல் எழுப்பின.
இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள சிறைகளின் பாதுகாப்பைச் சிறைத்துறை டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் தீவிரப்படுத்தினார்.
இந்நிலையில், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை இயக்குநராக இருந்த டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர், சென்னை மின்வாரிய லஞ்ச ஒழிப்புப் பிரிவு டிஜிபியாக (தலைமை அதிகாரி) நியமிக்கப்பட்டுள்ளார்.
அமலாக்கப் பிரிவு சிஐடி கூடுதல் டிஜிபியாகப் பணியாற்றிய கே.சங்கர், சிறைத்துறையின் புதிய இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேபோல், காத்திருப்போர் பட்டியலில் இருந்த டிஜிபி சஞ்சய் மாத்தூர், மாநில குற்ற ஆவணக் காப்பக டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ளார். அங்கு ஐஜியாகப் பணியாற்றிய சோனல் சந்திரா, தலைமையிட ஐஜியாக மாற்றப்பட்டுள்ளார்.
தாம்பரம் காவல் ஆணையரகத்தில் பள்ளிக்கரணை துணை ஆணையராகப் பணியாற்றிய பி.ரகுபதி, கரூர் மாவட்ட எஸ்.பி-யாக நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை வடக்கு பொருளாதாரக் குற்றப்பிரிவு எஸ்.பி-யாக இருந்த ஆர்.ஸ்டாலின், தென்காசி மாவட்ட எஸ்.பி-யாகவும், அங்கு பணியாற்றிய எஸ்.அசோக்குமார், மதுரை தீவிரவாதத் தடுப்புப் பிரிவு எஸ்.பி-யாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை உள்துறைச் செயலர் கார்த்திக் நேற்று பிறப்பித்தார்.