கோப்புப் படம்

 
தமிழகம்

மருத்துவமனைகளில் ஆட்டிஸம், பிறவி மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை

தமிழக சுகாதாரத் துறை அரசாணை வெளியீடு

செய்திப்பிரிவு

சென்னை: ‘ஆட்டிஸம், கவனச்சிதறல், பிறவி மரபணு குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனைகளில் புறநோயாளிகள் சிகிச்சை பிரிவில் முன்னுரிமை வழங்க வேண்டும்’ என்று தமிழக சுகாதாரத் துறை அரசாணை வெளி யிட்டுள்ளது.

தமிழகத்தில் ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் (ஏஎஸ்டி), கவனச்சிதறல் (ஏடிஹெச்டி), கற்றலில் குறைபாடு (எஸ்எல்டி) போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவ சிகிச்சைகள் பெறுவதில் சில பிரச்சினைகள் உள்ளன. குறிப்பாக, புறநோயாளிகள் சிகிச்சையின்போது நீண்ட வரிசையில் மற்றவர்களைப் போல், அவர்களால் காத்திருக்க முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக அரசிடம் அறிவுசார் குறைபாடுடையோருக்கான சங்கம் வேண்டுகோள் விடுத் துள்ளது.

          

அதன்படி, ஆட்டிஸம், பெருமூளை வாதம், கவனச்சிதறல், பிறவி மரபணுக் குறைபாடு, பல்லுறுப்பு முடக்கம் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளானவர்களுக்கு சிகிச்சை வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. அதனை ஏற்றுகொண்ட தமிழக சுகாதாரத்துறை, அவசர சிகிச்சைகளுக்கு இருக்கும் நடைமுறையைப் போல், இத்தகைய பாதிப்புக்கு உள்ளானவர்களுக்கு புறநோயாளிகள் சிகிச்சையின்போது முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அரசாணை பிறப்பித்துள்ளது. அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளிலும் இந்த நடைமுறையைப் பின்பற்ற வேண்டும்.

மருத்துவ கல்வி இயக்ககம், மருத்துவ சேவைகள் இயக்ககம், பொது சுகாதாரத்துறை, இந்திய மருத்துவர் சங்கம் சார்பில் அது தொடர்பான அறிவுறுத்தல்களை மருத்துவமனைகளுக்கு வழங்க வேண்டும் என்று அரசாணையில் சுகாதாரத்துறை செயலர் ப.செந்தில்குமார் உத்தர விட்டுள்ளார்.

SCROLL FOR NEXT