தமிழகம்

கிறிஸ்தவ பாதிரியாரின் சொத்துகள் அவர் சார்ந்த அமைப்புக்கே சேர வேண்டும்: உயர் நீதிமன்றம் உத்தரவு

ரூ.56 லட்சத்துக்கு உரிமை கோரிய வழக்கில் தீர்ப்பு

செய்திப்பிரிவு

மதுரை: கிறிஸ்தவ பாதி​ரியார் ஒரு​வரின் கல்வி, பராமரிப்பு, சிகிச்சை மற்​றும் இறுதிச் சடங்கு செல​வு​களை அவர் சார்ந்த மத அமைப்பு ஏற்​றுக்​கொண்ட நிலை​யில், சம்​பந்​தப்​பட்ட பாதி​ரியார் பணிக் காலத்​தில் சேமித்த நிதி அவர் சார்ந்த அமைப்​புக்கே சேர வேண்​டும் என உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டது.

கர்​நாடக மாநிலம் பெங்​களூரு ஏபி​விஎம் கத்​தோலிக்​கச் சங்​கத்​தைச் சேர்ந்த பாதி​ரியார் தெய்​வகுமார் அருளானந்​தம். இவர் உடல் நலக்​குறைவால் உயி​ரிழந்​தார். கரூர் மாவட்​டம் குளித்​தலை​யில் பாதி​ரியாராகப் பணிபுரிந்​த​போது அங்​குள்ள எஸ்பிஐ வங்​கி​யில் தனிக் கணக்​குத் தொடங்கி ரூ.56 லட்​சம் வைப்பு நிதி செலுத்​தி​யுள்​ளார்.

அவர் உயி​ரிழந்த நிலை​யில் அந்த வைப்பு நிதிக்கு உரிமை கோரி ஏபி​விஎம் கத்​தோலிக்க சங்​கம் சார்​பிலும், அவரது சகோ​தரர்​கள் தெய்​வநாயகம், ஜோசப், சகோ​தரி மகள் மேரி ஜமீலா ஆகியோர் தரப்​பிலும் கரூர் மாவட்ட நீதி​மன்​றத்​தில் வழக்​குத் தொடரப்​பட்​டது. விசா​ரணைக்​குப் பின்பு வைப்பு நிதி உறவினர்​களுக்​குத்​தான் சொந்​தம் என தீர்ப்​பளிக்​கப்​பட்​டது.

இதை எதிர்த்து ஏபி​விஎம் கத்​தோலிக்க சங்​கத்​தைச் சேர்ந்த ஆரோக்​கியசாமி உயர் நீதி​மன்ற மதுரை அமர்​வில் மனுத் தாக்​கல் செய்​தார். அந்த மனுவில், ‘தெய்​வகுமார் அருளானந்​தம் பாதி​ரியாராக பணி​யாற்​றிய காலத்​தில் அவர் ஈட்​டிய அனைத்து உடைமை​களும் சங்​கத்​துக்​குச் சொந்​த​மானது என உயில் எழுதி வைத்​துள்​ளார். இத​னால் அவரது அனைத்து உடைமை​களுக்​கும் சங்​கமே வாரிசுதா​ரர். அவர் சேலத்​தில் பாதி​ரியாராகப் பணிபுரிந்​த​போது உடல்​நலக் குறைவு ஏற்​பட்டு உயி​ரிழந்​தார். அவருக்​கான சிகிச்​சைக்கு சங்​கமே முழு​மையாகச் செல​விட்​டது.

ஒரு​வர் மத அமைப்​பில் சேர்ந்த பிறகு அவர் தனது மத வாழ்க்​கை​யின்​போது ஈட்​டிய சொத்​துகள் மீது அவருக்​குத் தனிப்​பட்ட உரிமையோ அல்​லது பற்றோ இருக்​காது. அந்​தச் சொத்​துகள் அந்த அமைப்​பின் நலனுக்​காகவே உரு​வாக்​கப்​பட்​டவை. எனவே, கரூர் நீதி​மன்ற உத்​தரவு​களை ரத்து செய்ய வேண்​டும்’ எனக் கூறப்​பட்​டிருந்​தது.

இந்த மனுவை விசா​ரித்து நீதிப​தி​கள் என்.ஆனந்த்​வெங்​கடேஷ், கே.கே.ராமகிருஷ்​ணன் அமர்வு பிறப்​பித்த உத்​தரவு: பாதிரியார் தொடக்​கக் காலங்​களில் வளர்ந்து வரு​வதற்​குத் தேவை​யான கல்வி, பராமரிப்பு, சிகிச்சை மற்​றும் இறுதிச் சடங்கு போன்ற செல​வு​களை அவர் சார்ந்த மத அமைப்பு ஏற்​றுக்​கொண்​டுள்​ளது. எனவே, அவர் பணிக்​காலத்​தில் திரட்​டிய நிதி அவர் சார்ந்த அமைப்​புக்கே சேர வேண்​டும் என்​பது தெளிவாகிறது.

ஒரு மதகுரு​வின் சகோ​தரர்​கள் மற்​றும் சகோ​தரி​யின் மகள் ஆகியோர் தாங்​கள் அவரது சட்​டப்​பூர்வ வாரிசுகள் என்ற ஒரே காரணத்​துக்​காக அவர் மறைந்த பிறகு அவரது சொத்​துகளுக்கு உரிமை கோரு​வதை இந்த நீதி​மன்​றம் ஏற்​க​வில்லை. அவர்​கள் திரு​முழுக்கு பெற்ற கிறிஸ்தவர்​களாக இருப்​ப​தும், அந்த மதகுரு மத வாழ்க்​கை​யில் நுழைந்த பிறகு அவரது விவகாரங்​களில் தங்​களுக்கு எந்த உரிமையும் இல்லை என்று அவர்​களே ஒப்​புக்​கொண்​டுள்​ளனர். எனவே, கரூர் நீதி​மன்ற உத்​தரவு ரத்து செய்​யப்​படு​கிறது.

இந்த உரிமையியல் மேல்​முறையீடு நிலுவை​யில் இருந்த காலத்​தில் இறந்த பாதி​ரியாரின் உறவினர்​கள் வைப்​புத் தொகையைப் பெற்​றுக்​கொண்​ட​தாக தெரி​கிறது. அந்​தத் தொகையை ஒரு மாதத்​தில் 3 பேரும் வட்​டி​யில்​லாமல் ஏபி​விஎம் சங்​கத்​துக்கு திருப்​பிச் செலுத்த வேண்​டும். குறிப்​பிட்ட மாதத்​துக்​குள் திருப்​பிச் செலுத்​தத் தவறினால், தீர்ப்பு வழங்​கிய நாளி​லிருந்து தொகை முழு​மையாகச் செலுத்​தப்​படும் தேதி வரை ஆண்​டுக்கு 9 சதவீத வட்​டியுடன் சேர்த்​துச் செலுத்த வேண்​டும். இவ்​வாறு நீதிப​தி​கள் உத்​தர​வில் கூறியுள்​ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT