தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று திருத்தணியில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கையில் வெள்ளி வேலை ஏந்தி பிரச்சாரத்தை தொடங்கினார்.
திருத்தணி: தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து நேற்று திருத்தணியில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பிரச்சாரத்தை தொடங்கினார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலில், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக சார்பில், விருத்தாசலம், விருதுநகர், பல்லாவரம் உள்ளிட்ட 10 சட்டப்பேரவை தொகுதிகளில், அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், இளைஞரணி செயலாளர் விஜயபிரபாகரன் உள்ளிட்ட 10 பேர் போட்டியிடுகின்றனர்.
இந்த வேட்பாளர்களை ஆதரித்து, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் திருத்தணியில் தேர்தல் பிரச்சாரத்தை ஏப். 1-ம் தேதி தொடங்குவதாக, அக்கட்சியின் தலைமை நேற்று முன் தினம் அறிவித்தது.
அதன்படி, தேர்தல் பிரச்சாரத்தை தொடங்குவதற்காக நேற்று திருத்தணிக்கு வருகை தந்த பிரேமலதா விஜயகாந்த்தை, தேமுதிக, திமுக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர்.
அப்போது, திருத்தணி தொகுதியின் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தி, பிரேமலதா விஜயகாந்தை வரவேற்று, வெள்ளியிலான வேலை நினைவு பரிசாக வழங்கினார். அந்த வேலுடன் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்ற பிரேமலதா விஜயகாந்த், வெள்ளி வேலை சுப்பிரமணிய சுவாமியின் பாதங்களில் வைத்து, சுவாமி தரிசனம் செய்தார்.
தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த், திருத்தணி கமலா திரையரங்கம் அருகே தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து, வெள்ளி வேலை கையில் ஏந்தி தன் பிரச்சாரத்தை தொடங்கினார்.
இந்த பிரச்சாரத்தில் திருத்தணி தொகுதியின் தேமுதிக வேட்பாளர் கிருஷ்ணமூர்த்தியை ஆதரித்து பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: தமிழக சட்டப்பேரவை 2011 தேர்தலில் திருத்தணி தொகுதியில் முரசு வென்றது. அந்த வரலாறு 2026-ல் திரும்பும். திருத்தணி தொகுதியில் தேமுதிக வெற்றி பெற்று வரும்போது, இத்தொகுதியை எல்லா வகையிலும் முன்னேற்றுவோம்.
திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தையும் திமுக கூட்டணி வெற்றி பெற்ற உடன் செய்வோம். திருத்தணி தொகுதி மக்கள், திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் செவ்வாய்க் கிழமைகளில் சிறப்பு வழிகளில் தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்படும்.
திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு மாற்றுப்பாதை அமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். திருத்தணியில் புதிய பூங்காக்கள் மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அமைக்கப்படும். திருத்தணி தொகுதியில், மகளிர் உரிமை தொகை விடுபட்டவர்களுக்கு கிடைக்கவும், விடுபட்ட பகுதி நேர ரேஷன் கடைகளை விரைவில் திறக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
திருத்தணி தொகுதியில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க பன்னாட்டு நிறுவனங்கள் அமைக்கப்படும்; திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை நவீனமாக்கப்படும். நெல்கொள்முதல் நிலையங்கள் அதிகரிக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்வில், திமுகவின் திருவள்ளூர் மேற்கு மாவட்ட செயலாளர் சந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர் பூபதி உள்ளிட்ட திமுக, தேமுதிக உள்ளிட்ட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் என திரளானோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, பிரேமலதா விஜயகாந்த், திருத்தணி தொகுதிக்கு உட்பட்ட கே.ஜி.கண்டிகை, பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் தன் தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டார்.