பிரேமலதா விஜயகாந்த்
சென்னை: “சட்டப்பேரவையில் தனிமனித துதிப் பாடல் தான் அதிகமாக உள்ளது” என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் சாடியுள்ளார். மேலும், நேரலை துண்டிப்பு குறித்தும் அவர் அதிருப்தி தெரிவித்தார்.
இது தொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “சட்டப்பேரவையில் ஆளுநர் உரை மீது நடந்த விவாதத்தில் நன்றி தெரிவித்து உறுப்பினர்கள் பேசியபோது, உறுப்பினர்களின் பேச்சு என்பது தொடர்ந்து நீடித்து கொண்டே போகிறது. உறுப்பினர்கள் உரையில் தனிக் கட்சியை பற்றியும், தனித் தலைவர்களை பற்றியும் துதிப் பாடல்கள் தான் அதிகமாக இருக்கின்றன.
பேரவைத் தலைவர் கூட, “இது ஆளுநர் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானம், அதைப்பற்றி மட்டும் பேசுங்கள்” என பல முறை கூறியும், தனிமனித துதிப் பாடல்களும், தனிக்கட்சி துதிப் பாடல்களும் தான் பேசப்படுகின்றன. இது கவலை அளிக்கக் கூடிய விஷயமாகும்.
எதைப் பற்றி பேச வேண்டுமோ, அதைப் பற்றி பேசாமல் திசை திரும்பி வேறு எதையோ பேசிக் கொண்டிருக்கின்றனர். அது எப்போது முடியும் என்பதும் கூட தெரியவில்லை. தலைவர்கள் துதிப் பாடல் பற்றி பேசினால், நாங்கள் கூட எவ்வளவு வேண்டுமானாலும் பேசலாம்.
தமிழகத்தில் சாதி, மத, இனம், மொழிக்கு அப்பாற்பட்டவர் தேமுதிக தலைவர் விஜயகாந்த். இவ்வாறு ஒவ்வொரு கட்சியும், அவரவர் தலைவர்களின் பெருமைகளை பேசுவதற்காக சட்டப்பேரவையை பயன்படுத்தினால் அது ஒரு நல்ல எடுத்துக்காட்டாக இருக்காது. சட்டப்பேரவையை பொறுத்தவரை ஆரோக்கியமான விவாதங்கள் இடம்பெற வேண்டும்.
அதேபோல் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை கொடுக்கப்படும் என்று கூறினர். ஆனால், பாதியிலேயே துண்டித்து விட்டதாக தெரிகிறது. பேரவையில் நடக்கும் நிகழ்வுகளை மக்கள் நேரடியாக பார்க்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு என்ன நடக்கிறது என்பது தெரியும். அதில் என்ன தவறு? சட்டப்பேரவையே மக்கள் வரிப்பணத்தில் தானே நடக்கிறது. இது தொடர்பாக பேரவைத் தலைவரின் கவனத்துக்கு கொண்டு செல்வேன்” என்று அவர் கூறினார்.