பிரேமலதா விஜயகாந்த்

 
தமிழகம்

“தை பிறந்தால் வழி பிறக்கும்” - கடலூர் மாநாட்டில் கூட்டணி குறித்து பிரேமலதா சஸ்பென்ஸ்

வேட்டையன்

கடலூர்: எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பதை கடலூர் மாநாட்டில் அறிவிப்பதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஏற்கெனவே அறிவித்திருந்தார். இந்நிலையில், வெள்ளிக்கிழமை அன்று கடலூரில் நடைபெற்ற மாநாட்டில் கூட்டணி யாருடன் என்பதை அவர் அறிவிக்காமல் சஸ்பென்ஸ் வைத்தார்.

கடலூர் மாவட்டம் பாசாரில் தேமுதிக மாநாடு வெள்ளிக்கிழமை (ஜன.9) நடைபெற்றது. இதில் தேமுதிக தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் என திரளானோர் பங்கேற்றனர். இந்த மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்துக்கு வீரவாள் பரிசளிக்கப்பட்டது. முன்னதாக, இந்த மாநாட்டில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதையடுத்து பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது:

“இந்த மாநாட்டை சிறப்பிக்க பங்கேற்றுள்ள கட்சியின் உறுப்பினர்கள், மக்கள் அனைவருக்கும் எனது பணிவான வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாட்டுக்காக அயராத உழைப்பை செலுத்திய நிர்வாகிகள் மற்றும் இதற்கு நிதி உதவி அளித்த அனைவருக்கும் நன்றி. ரசிகர் மன்றமாக ஆரம்பித்த பணி இன்று தேசிய முற்போக்கு திராவிடர் கழகமாக இருக்கிறது. கடலூர் மாவட்டம் என்றாலே அது விஜயகாந்தின் (கேப்டன்) கோட்டை ஆகும். அதனால்தான் இந்த முறை கடலூர் மாவட்டத்தில் நமது மாநாட்டை திட்டமிட்டோம்.

விஜயகாந்த் இல்லாமல் நாம் யாரும் இல்லை. அவர் நம்முடன் உள்ளார். நமது மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்கள் அனைத்தும் மக்களுக்கானது. தமிழகத்தில் தேமுதிக-வுக்கு இணையான கட்சி வேறேதும் இல்லை. தொண்டர்கள் தங்கள் சொந்த செலவில் இங்கு வந்து மாநாட்டை சிறப்பித்துள்ளனர். இது அன்புக்காக சேர்ந்த கூட்டம்.

இனி தேமுதிக அவ்வளவுதான் என பேசிய அனைவரும் இந்த மாநாட்டை பாருங்கள். இதுதான் தேமுதிக. இதுதான் தேமுதிக தொண்டர்கள். தேசத்துக்கு உண்மையாக உழைத்துக் கொண்டிருக்கும் கட்சி தேமுதிக.

தேர்தல் வந்தால் பேரம் பேரம் என சொல்கிறார்கள். ஆமாம் பேசினேன், பேசுகிறேன். யாரிடம் பேசினேன் தெரியுமா? எங்கள் நிர்வாகிகளிடம் பேசுவேன். தொண்டர்களிடம் பேசுவேன்.

தேமுதிக இல்லாமல் எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முடியாது. எந்த கட்சியுன் கூட்டணி என முடிவெடுத்துவிட்டேன். ஆனால், அது குறித்து நிதானமாக யோசித்து முடிவை அறிவிப்பேன். ஆண்ட கட்சி, ஆளும் கட்சில என எந்த கட்சியும் கூட்டணி குறித்து இதுவரை அறிவிக்கவில்லை. அதனால் கூட்டணி குறித்த அறிவிப்பில் அவசரம் காட்ட விரும்பவில்லை. தொண்டர்கள் எண்ணப்படியே கூட்டணி அமைக்கப்படும். தை பிறந்தால் வழி பிறக்கும். விரைவில் அது குறித்து அறிவிக்கப்படும்” என்றார்.

SCROLL FOR NEXT