விருத்தாசலம்: விருத்தாசலம் சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று தனது பணியை தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா தொடங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
விருத்தாசலத்தை தலைமையிடமாகக் கொண்டு ஒரு மாவட்டத்தை உருவாக்க வேண்டும் என்பது தொகுதி மக்களின் விருப்பம். முதல்வரைச் சந்தித்து விருத்தாசலத்தை மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை வைப்பேன்.
‘மதுக்கடையை மூடிவிட்டோம்’ என்றார்கள். ‘விருத்தாசலத்தில் ஒரு கடையும் மூடப்படவில்லை’ என மக்கள் தெரிவிக்கின்றனர். எல்லாம் கண்துடைப்பாக உள்ளது.
பெண்கள், குழந்தைகள் பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படுகின்றனர். இவற்றைத் தடுக்க அறிவிக்கப்பட்ட சிங்கப் பெண் அதிரடிப் படையை விரைவில் அமைக்க வேண்டும். ‘பொறுப்பேற்று ஒரு மாதம்தான் ஆகிறது’ என்று அமைச்சர்கள் கூறுகின்றனர், அவர்களுக்கு கொஞ்சம் நாள் அவகாசம் கொடுப்போம். இவ்வாறு அவர் கூறினார்.