மனித குலத்தை மெல்ல கொல்லும் நுண்நெகிழி

இன்று - ஜூன் 5: உலக சுற்றுச்சூழல் தினம்
மனித குலத்தை மெல்ல கொல்லும் நுண்நெகிழி
Updated on
1 min read

நுண்நெகிழி (Microplastics) என்பது ஒரு நானோ மீட்டர் முதல் 5 மில்லி மீட்டர் அகலமுள்ள பிளாஸ்டிக்கின் குறைவான அளவுள்ள மிகச்சிறிய நெகிழித் துகளாகும். இவை உடைந்து சிதைந்த நெகிழிகழிவுகள் மூலமாகவோ, செயற்கை இழைகளான ஆடைகள் மூலமாகவோ சுற்றுச்சூழலை மாசுபடுத்துகின்றன.

மேலும், நெடுநாட்கள் பயன்படுத்தப்படும் தண்ணீர் நெகிழி கலன்கள், அதிக நாட்கள் நெகிழியில் சுற்றப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் அதிக சூரிய ஒளியில்பட்ட நெகிழிகள் மூலமாக இவை சுற்றுச்சூழலில் இணைகின்றன. அறிவியல் ஆய்வின்படி 2020-ம் ஆண்டில் 2.7 மில்லியன் டன் நுண் நெகிழிகள் நீர், நிலம், காற்றில் கலந்துள்ளன. இது 2040-ம் ஆண்டில் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடைசியில் இவை அனைத்தும் நமது உணவுச் சங்கிலியில் இணைகின்றன. மனிதர்கள் ஆண்டுக்கு சராசரியாக 39,000 முதல் 52,000 நுண் நெகிழி துகள்களை உட்கொள்ளக்கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.

நெகிழிகள் மண்ணின் வளத்தை குறைத்து பயிர்கள் வளர்வதற்கும், அதன் சுவாசத்துக்கும் இடையூறாக இருக்கும். இது சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் திறனைக் கட்டுப்படுத்தி மற்றும் புவி வெப்பமடைதலை துரிதப்படுத்துகிறது. அறிவியல் ஆராய்ச்சியின்படி, நுண் நெகிழிகள், சிவப்பு ரத்த அணுக்களின் வெளிப்புற சவ்வுகளில் ஒட்டிக் கொள்வதுடன், ஆக்ஸிஜனை கொண்டு செல்லும் திறனை கட்டுப்படுத்துகின்றன.

கர்ப்பிணிகளின் நஞ்சுக் கொடிகளிலும் நுண்நெகிழி துகள்கள் காணப்படுகின்றன. இத்தாலியின் ரோமில், பிரசவித்த ஒரு வாரத்துக்குப் பிறகு 34 ஆரோக்கியமான தாய்மார்களிடமிருந்து தாய்ப்பால் மாதிரிகள் எடுக்கப்பட்டன. அவற்றில் 75 சதவீத தாய்ப்பாலில் நுண்நெகிழி துகள்கள் கண்டறியப்பட்டன. சமையலுக்கு பயன்படுத்தப்படும் பாலி டெட்ராஃப்ளோரோ எதிலீனில் பூசப்பட்ட நான்ஸ்டிக் சமையல் கலன்கள் காலப்போக்கில் உணவில் நெகிழி துகள்களை சிதைத்து வெளியிடுகிறது. அதற்கு பதிலாக, வார்ப்பிரும்பு, துருப்பிடிக்காத எஃகு, கார்பன் எஃகு போன்ற கலன்களை சமையலுக்கு பயன்படுத்தலாம்.

சூடான உணவு பதார்த்தங்களை நெகிழி பைகளில் வாங்கும்போது, நுண் நெகிழிகள் உணவில் கலந்து இதய ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களையும் வெளியேற்றக்கூடும்.

நெகிழியால் ஆன கலன்களை திரும்பத் திரும்ப பயன்படுத்தும் போது, அவற்றின் உட்புற மேற்பரப்பில் இருந்து நுண்நெகிழிகள் வெளியேறுகின்றன. நெகிழி கலன்களில் உள்ள தண்ணீரை காய்ச்சி வடிகட்டி குடிப்பதும், ஒரு எளிய கார்பன் வடிப்பானை பயன்படுத்துவதும் நுண்நெகிழியின் அளவை குறைக்க உதவும்.

நம் அன்றாட வாழ்வில் இரண்டறக் கலந்த நெகிழி, இன்று மனித இனத்தின் மெதுவான அழிவுக்கு முதன்மைக் காரணமாக மாறியுள்ளது வேதனை அளிக்கிறது.

கட்டுரையாளர்: பேராசிரியர் பா.பாலகுரு, தாவரவியல் துறை, ஜமால் முகமது கல்லூரி, திருச்சி

மனித குலத்தை மெல்ல கொல்லும் நுண்நெகிழி
கரூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 5 பேருக்கு தலா 2 ஆண்டுகள் சிறை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in