சென்னை: திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ள நெல்லை பாதுகாப்பான கிடங்குகளுக்கு மாற்றுமாறு தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கும்பகோணம், தஞ்சாவூர், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகளிடம் இருந்து அரசு நேரடியாக நெல் கொள்முதல் செய்யாததால், அறுவடை செய்யப்பட்ட நெல் சாலையோரத்திலும், திறந்த வெளியிலும் குவித்து வைக்கப்பட்டுள்ளது.
மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மழையில் நனைந்து நெல் வீணாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, விவசாயிகளிடம் உள்ள நெல்லை அரசு உடனே நேரடி கொள்முதல் செய்ய வேண்டும். திறந்த வெளியில் உள்ள நெல்லை பாதுகாப்பான கிடங்குகளுக்கு மாற்ற வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.