

சென்னை: நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் துறை டெண்டர் முறைகேடு தொடர்பாக திமுக முன்னாள் அமைச்சர் கே.என். நேருவிடம் விரைவில் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் முடிவு செய்துள்ளனர். விசாரணை தொடர்பான அனைத்து தகவல்களும் திரட்டப்பட்ட பின்னர் நேரு உட்பட அனைவருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தப்படும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக கே.என்.நேரு பதவி வகித்தார். அந்த காலகட்டத்தில் துறையில் பல்வேறு டெண்டர்கள் வழங்கியதில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இதற்கிடையே, கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான கோவை அலுவலகத்தில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் தொடர்பான குற்றச்சாட்டின் பேரில் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக டிஜிபிக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது.
அதில், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ஊழல் நடைபெற்றுள்ளதாகவும், இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தது.
ஆனால், நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், கடந்த டிசம்பர் மாதம் தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை மீண்டும் கடிதம் அனுப்பியது.
அதில், ரூ.1,020 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், கே.என். நேரு மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தாக கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக அதிமுக எம்.பி. இன்பதுரை சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், அமலாக்கத் துறை அளித்த கடிதத்தின் அடிப்படையில் கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, முறைகேடு குற்றச்சாட்டில் கே.என்.நேரு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி அவர் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார். வழக்கை விசாரித்த நீதிமன்றம், கே.என்.நேரு மீது மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், டெண்டர் முறைகேடு தொடர்பாக கே.என்.நேரு, அவரது சகோதரர்கள் மற்றும் அவர்களுக்கு தொடர்புடைய வீடுகள், அலுவலகங்கள் என சென்னை, கோவை, திருச்சி, ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் மொத்தம் 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
சோதனையில் முறைகேடு தொடர்பான 241 ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுஒருபுறம் இருக்க, தன் மீதான குற்றச்சாட்டுகளை கே.என்.நேரு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்நிலையில், கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் மின்னணு ஆதாரங்களில் உள்ள தகவல்களை தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.
விசாரணை தொடர்பான அனைத்து தகவல்களும் திரட்டப்பட்ட பின்னர், வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் சம்மன் அனுப்பி நேரில் வரவழைத்து விசாரணை நடத்தப்படும். கே.என்.நேரு மற்றும் அவரது சகோதரர்களிடமும் விசாரணை நடத்தப்படும் என்று லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.