திமுக கூட்டணியில் கடைசியாக வந்து சேர்ந்த தேமுதிக-வுக்கு கூடுதல் தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் கூட்டணிக் கட்சிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்திய நிலையில், தற்போது தங்களை ஒதுக்கிவிட்டு பிரேமலதா அறிவித்திருக்கும் பிரச்சாரப் பயணத் திட்டமும் கூட்டணிக் கட்சிகளை திகைக்க வைத்திருக்கிறது.
இதுகுறித்து திமுக கூட்டணி தரப்பில் நம்மிடம் பேசியவர்கள், “பிரேமலதா வெளியிட்டுள்ள பிரச்சாரப் பயணத் திட்டத்தில் தனது கட்சி வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு மட்டுமே அவர் முன்னுரிமை அளித்துள்ளார். ஏப்ரல் 15-ல் மட்டும் சென்னையில் உள்ள சில தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பேசுகிறார். மற்றபடி தமிழகம் முழுவதும் உள்ள கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அவர் கண்டுகொள்ளவில்லை.
கூட்டணி பேச்சுவார்த்தையின் போது திமுக தரப்பில் அளிக்கப்பட்ட ஒரு முக்கிய உறுதிமொழியை நிறைவேற்றுவதில் கால தாமதம் ஏற்படுவதால் தான் பிரேமலதா இத்தகைய நிலைப்பாட்டை எடுத்திருப்பதாக சிலர் சொல்கிறார்கள். பிரேமலதாவுக்கு நெருக்கமானவர்களோ, ‘அவரது உடல்நிலை ஒத்துழைக்காததால் தான் தமிழகம் முழுமைக்குமான பிரசாரப் பயணத்தை சுருக்கிக் கொண்டிருக்கிறார்’ என்கிறார்கள். இருப்பினும், தனது கட்சிக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் பிரேமலதாவின் இந்த பயணத் திட்டம் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது” என்றனர்.