கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே நேற்று இரவு நடைபெற்ற தேமுதிக மாநாட்டில் பங்கேற்ற பொதுச் செயலாளர் பிரேமலதா, பொருளாளர் சுதீஷ், இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன். (அடுத்த படம்) கூட்டத்தில் பங்கேற்றோரில் ஒரு பகுதியினர். | படங்கள்: எம்.சாம்ராஜ் |
விருத்தாசலம்: தேமுதிக சார்பில் ‘மக்கள் உரிமை மீட்பு மாநாடு’ கடலுர் மாவட்டம் வேப்பூர் அடுத்த பாசார் கிராமத்தில் நேற்று நடைபெற்றது. தலைமை நிலையச் செயலாளர் பார்த்தசாரதி மாநாட்டுத் தீர்மானங்களை வாசித்தார்.
பின்னர், கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசியதாவது: இந்த மாநாட்டில் இயற்றப்பட்டத் தீர்மானங்கள் முக்கியமானவை. விஜயகாந்தின் எண்ணங்களைப் பிரதிபலிக்கும் வகையில் தீர்மானங்கள் இயற்றப்பட்டுள்ளன.
இந்த நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாள். இதனால் முக்கிய முடிவுகள் குறித்த எதிர்பார்ப்புடன் தொண்டர்கள் வந்துள்ளனர். சட்டப்பேரவைத் தேர்தல் கூட்டணிக்காக, நான் பேரம் பேசுவதாக கடந்த சில மாதங்களாக தொலைக்காட்சிகளிலும், சமூக வலைதளங்களிலும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நாங்கள் கட்சி நிர்வாகிகளிடமும், தொண்டர்களிடமும் இதுகுறித்து பேசுகிறோம்.
அதை யார் கேள்வி கேட்பது? யாருடன் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாக கட்சிக்காரர்களிடம் பேசுவேன். அவர்கள் யாரை சுட்டிக் காட்டுகிறார்களோ, அவர்களிடம் பேசுவோம்.
தேமுதிகவைப் பற்றி ஏளனமாகவோ, தரக்குறைவாகவோ எவரேனும் பேசினால், தொண்டர்கள் தக்க பதிலடி கொடுப்பார்கள். கூட்டணி தொடர்பாக மாவட்டச் செயலாளர்களுடன் தலைமைக் கழகத்தில் ஆலோசனை நடத்தி, அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தோம்.
தற்போதைக்கு எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைப்பது குறித்து முடிவு செய்ய வேண்டாம் என்பதே அவர்களின் கருத்தாக இருந்தது. எதற்காக இதைக் கூறுகிறேன் என்றால், இதுவரை நாம் சத்ரியனாக இருந்துவிட்டோம், இனி சாணக்கியத்தனமாக இருக்க வேண்டும்.
ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ அல்லது மத்தியில் உள்ள கட்சிகளோ கூட்டணி குறித்து அறிவிக்காதபோது, நாம் மட்டும் ஏன் முந்திரிக்கொட்டைபோல முந்திக் கொள்ள வேண்டும்.
தேமுதிக இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. தைபிறந்தால் வழி பிறக்கும். எனவே, நமக்கு இன்னும் நேரம் இருக்கிறது. தெளிவாகச் சிந்தித்து, தொண்டர்களுடன் ஆலோசித்து, தேமுதிக தொண்டர்களை மதிப்பவர்களுடன் கூட்டணி வைக்கப்படும்.
உரிய ஆலோசனைக்குப் பின்னர் கூட்டணி குறித்து முடிவெடுக்கப்படும். இவ்வாறு பிரேமலதா பேசினார். கூட்டத்தில், தேமுதிக பொரு
ளாளர் சுதீஷ், இளைஞரணிச் செயலாளர் விஜய பிரபாகரன் மற்றும் நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்துகொண்டனர்.