தமிழகம்

“விவசாயிகள் நலனை முன்னிறுத்தும் அரசியல் கட்சிக்கு வாக்கு” - பி.ஆர்.பாண்டியன் உறுதி

டி.ஜி.ரகுபதி

மேட்டுப்பாளையம்: விவசாயிகள் நலனை முன்னிறுத்தும் அரசியல் கட்சிக்கு தான் வாக்களிக்கப்படும் என தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் நிர்வாகிகளின் கலந்தாலோசனைக் கூட்டத்தில் இன்று (ஏப் 10) முடிவெடுக்கப்பட்டது.

கொங்கு மண்டல அளவில், தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் முன்னணி தலைவர்கள், விவசாயிகள் கலந்தாலோசனைக் கூட்டம் மேட்டுப்பாளையத்தில் உள்ள அரங்கில் இன்று (ஏப்.10) நடைபெற்றது.

கொங்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் ஏ.எஸ்.பாபு தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் கே.எம்.ராம கவுண்டர் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக மாநில தலைவர் பி.ஆர்.பாண்டியன் பங்கேற்று பேசினார்.

          

அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பி.ஆர்.பாண்டியன் கூறியது: “திமுக கடந்த 2021-ம் ஆண்டு தேர்தலின்போது கொடுத்த தேர்தல் அறிக்கையில் கூறிய வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக விவசாயிகள் உற்பத்தி செய்யும் தோட்டக்கலை பயிர்கள் பழவகைகளை கேரளாவை பின்பற்றி மாவட்டங்கள் தோறும் விலை நிர்ணயக் குழுக்கள் அமைத்து உரிய விலையில் சந்தைப்படுத்துவதற்கு உத்திரவாதம் கொடுத்தனர்.

இடுபொருட்களை வீடுகள் தோறும் விவசாயிகளுக்கு நேரடியாக மானிய விலையில் விழங்கப்படும் என்றனர். ஆனால், நிறைவேற்றவில்லை. அனைத்து மாநிலங்களிலும் கள் விற்பனை செய்ய அனுமதிக்கிற போது தமிழ்நாட்டில் அனுமதி மறுக்கின்றனர். கொங்கு மண்டலத்தில் கோவையை ஒட்டி இருக்கிற கேரளா பகுதிகளில் கள் அனுமதிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

ஆனால், தமிழ்நாடு எல்லையில் கள் விற்பனை செய்தால் அதனை பல்வேறு வழக்குகள் போட்டு காவல் துறை மூலம் ஒடுக்க நினைக்கிறார். திமுக அரசின் துணையோடு கள் இறக்கும் விவசாயிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இது குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

கள் இறக்க அனுமதி கொடுக்க வேண்டும். வேளாண் கடன்கள் தள்ளுபடி வேண்டும். குடிமராமத்து திட்டத்தை கைவிட்டதால் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் நிலத்தடி நீர் பறிபோய் விட்டது.

மேற்கு தொடர்ச்சி மலைகள் அழிக்கப்படுவதால் விலங்கினங்கள் வாழ வழியின்றி, குடியிருப்பு பகுதிகளையும் விளை நிலங்களை நோக்கி வருகிறது. பயிர்களை அழிப்பதோடு, மணிதர்களையும் கொல்கிறது. விலங்கினங்கள் விளைநிலப் பகுதிகளுக்கு வருவதை தடை செய்ய வேண்டும்.

திமுக அரசு விவசாயிகளுக்கு விரோதமான கொள்கைகளை சட்டமாக்கி திட்டங்களாக செயல்படுத்தி விளைநிலங்கள் அபகரிப்பது தொடர்கிறது. விவசாயிகளுக்கு ஆதரவான கொள்கை கொண்ட ஆட்சியாளர்களை அடையாளம் கண்டு வாக்களிப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் கூறினார். இக்கூட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT