சென்னை: தமிழகத்தில் அதிகரித்து வரும் மின் தேவையைக் கருத்தில் கொண்டு, அடுத்தாண்டு ஜன. 18 முதல் ஜூன் 15 வரையிலான காலகட்டத்துக்கு 24 மணி நேரமும் தடையின்றி மின்சாரம் பெறும் வகையில் மின்வாரியம் டெண்டர் கோரியிருந்தது.
இதன்படி, ஜன.18 முதல் 31 வரை 2 ஆயிரம் மெகாவாட், பிப்ரவரி மாதம் 3 ஆயிரம் மெ.வா,மார்ச், ஏப்ரல் மாதங்களில் 3,500 மெ.வா, மே, ஜூன் முதல் பாதியில் 2,500 மெ.வா என மொத்தம் 17 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யத் திட்டமிடப்பட்டிருந்தது.
மத்திய அரசின் ‘டீப்' இணையதளத் தகவல்களின்படி, தனியார் மின் உற்பத்தியாளர்கள் ஜனவரிமாதத்துக்கு ஒரு யூனிட் ரூ.13 முதல் ரூ.14 வரையும், பிப்ரவரிக்கு ரூ.9.50 முதல் ரூ.20 வரையும், மார்ச் முதல் ஜூன் வரையிலான மாதங்களுக்கு ரூ.9 முதல் ரூ.20 வரையும் விலை நிர்ணயம் செய்துள்ளதோடு, 5,300 மெ.வா மட்டுமே தர முடியும் எனவும் தெரிவித்துள்ளனர். இது மொத்த மின்சாரத்தில் இது 31.18 சதவீதம் மட்டுமே என்பதால், மின்வாரியம் இன்னும் எந்த ஒப் பந்தத்தையும் இறுதி செய்யவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து மின்வாரிய மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.10 என்ற விலையில் கொள்முதல் செய்ய முடிவு செய்துள்ளோம். பல நிறுவனங்கள் யூனிட்டுக்கு ரூ.9 முதல் ரூ.12 வரை விலை கோரியுள்ளன. எனவே, ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கு முன்பு அந்த நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் திட்டமிட்டுள்ளோம். மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக மட்டுமே அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்க நாங்கள் சம்மதிக்க மாட்டோம். கடந்த மாதம்சில நிறுவனங்கள் ஒரு யூனிட்டுக்கு ரூ.40 வரை விலை கேட்டன. அந்த விண்ணப்பங்களை நாங்கள் நிராகரித்துவிட்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
ஸ்டாலினுக்கு அமைச்சர் பதில்: மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவில், ‘‘கடந்த வாரம் கேரளா அரசுக்கு ரூ.8.64-க்கு மின்சாரம் விற்பனை செய்ய ஒரு தனியார் நிறுவனம் தயாராக இருந்ததாக வெளிவந்த ஒரு செய்தியைக் குறிப்பிட்டு, தமிழக மின்சாரக் கொள்முதல் குறித்து பொய்யான செய்தியைப் பரப்ப முயன்றார் ஸ்டாலின்.
அதை கேரள அரசு மறுத்துள்ளது. அண்டை மாநிலங்கள் இருளில் மூழ்கி இருந்தபோது தமிழகமக்கள் இருளில் மூழ்கிவிடக் கூடாது, தமிழகத் தொழில்துறை பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக மட்டுமே சில தினங்கள் குறுகியகால அடிப்படையில் கேஸ் பவர் அதிக விலைக்கு வாங்கப்பட்டது. அதில் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என்பதை நிரூபிக்கத் தயாராக உள்ளோம். எனவே, திமுகவின் கறுப்புப் பக்கங்களை மறைக்க பொய்ச் செய்திகளைப் பரப்புவதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுங்கள்’’ என்று கூறியுள்ளார்.