திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளம் 2-வது அணு உலைக்குள் ஜெல்லி மீன்கள் புகுந்ததால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஒரு நாள் பராமரிப்பு பணிக்குப்பின் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது.
கூடங்குளத்தில் மன்னார் வளைகுடா கடலை ஒட்டி, தலா ஆயிரம் மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட முதல் மற்றும் 2-வது அணு உலைகளில் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. இந்த 2 அணுஉலைகளில் இருந்தும் தலா 562 மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு கிடைக்கிறது.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை 6 மணியளவில், 2-வது அணு உலையில் மின் உற்பத்தி திடீரென்று நிறுத்தப்பட்டது. அங்கு ஆய்வு செய்தபோது அணு உலைக்குள் ஜெல்லி மீன்கள் கூட்டம் கூட்டமாக புகுந்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து அதிகாரிகள், தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினர். அணு உலையை நிறுத்தி ஜெல்லி மீன்களை வெளியேற்றும் பணி நடைபெற்றது. அதன்பின்னர் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட்டது. ஒரு நாளுக்குப்பின் நேற்று மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது.
இதுகுறித்து, அணுமின் நிலைய அலுவலர்கள் கூறும்போது, “அணு உலைக்கு கடலில் இருந்து பிரத்யேக குழாய்கள் மூலம் கடல் நீர் கொண்டுவரப்படுகிறது. கடல்நீரை வடிகட்டி, அணு உலைக்கு அனுப்ப, வலை போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஆனாலும், அதையும் கடந்து ஈரப்பத பிரிப்பான் வடிகால் அமைப்பில் ஜெல்லி மீன்கள் புகுந்துவிட்டன. ஜெல்லி மீன்கள் கூட்டம் கூட்டமாக புகுந்ததால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. அவற்றை அகற்றிவிட்டு மீண்டும் மின் உற்பத்தி தொடங்கப்பட்டது” என தெரிவித்தனர்.