சென்னை: தேர்தல் காரணமாக சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளை தள்ளி வைக்கக்கோரி தொடரப்பட்ட வழக்கு வாபஸ் பெறப்பட்டதால் அதை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளரான டி.பிரபாகரன் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்த மனுவில், “தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்.23 அன்று நடைபெறவுள்ளது. சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில்தான் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானம் அமைந்துள்ளது.
தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்கும் கிரிக்கெட் போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்.3 மற்றும் ஏப்.11 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. தேர்தல் நேரத்தில் கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதால் சட்டம்- ஒழுங்கைப் பராமரிப்பதிலும், போக்குவரத்தை சீரமைப்பதிலும் போலீஸாருக்கு சிக்கல் ஏற்படும்.
குறிப்பாக கிரிக்கெட் ரசிகர்கள் என்ற பெயரில் அரசியல் கட்சியினர் மைதானத்துக்குள் பிரச்சாரம் செய்ய முற்பட்டு பிரச்சினை ஏற்பட்டால் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்வதிலும் சிக்கல் ஏற்படும். எனவே இந்த கிரிக்கெட் போட்டிகளை தேர்தல் முடிந்த பிறகு நடத்தும் வகையில் தள்ளிவைக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், “ஏற்கெனவே ஒரு போட்டி அமைதியான முறையில் முடிந்துவிட்டது. அதில் எந்த விதிமீறல்களும் இல்லை. அடுத்த போட்டியையும் முடிந்தால் கண்டு ரசியுங்கள். வெறும் ஊகத்தின் அடிப்படையில் தொடரப்பட்டுள்ள வழக்கை ஏற்க முடியாது” என்றனர்.
அதையடுத்து மனுவை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டதையடுத்து, அதற்கு அனுமதியளித்த நீதிபதிகள், வழக்கைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளனர்.