கோப்புப் படம்
சென்னை: மின்வாரிய கேங்மேன்கள், களப்பணி ஊழியர்களுக்கு தபால் வாக்கு வழங்க வேண்டும் என, தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து, அமைப்பின் பொதுச்செயலாளர் ஜெய்சங்கர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப்பேரவை தேர்தலையொட்டி, தமிழக அரசின் அறிவிப்பின் படி, மின்வாரிய பணியாளர்களுக்கு பொது விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வாக்களிக்கும் உரிமை மறுப்பு
இந்த பணியாளர்கள் அனைவருமே சொந்த ஊரை விட்டு 200, 300, 500 கி.மீட்டர் தொலைவில் பல்வேறு மின்வட்டங்களில் பணிபுரிந்து வருகின்றனர்.
2024-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது கேங்மேன் பணியாளர்களுக்கு சிறப்பு பணி என்ற பெயரில் நாடாளுமன்ற தேர்தல் நாளன்று ஒவ்வொரு பிரிவு அலுவலர்களும் பணி செய்திட நிர்பந்தம் செய்ததால், கேங்மேன் பணியாளர்கள் அனைவருக்கும் வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்டது.
மேலும், 2024-ம் ஆண்டு செய்த தவறை வரும் 23-ம் தேதி அன்று நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தல் நாளன்றும், கேங்மேன் பணியாளர்கள் பணி செய்ய பிரிவு அலுவலர்களால் நிர்பந்தம் செய்யப்பட்டு, பணி ஒதுக்கீடு பட்டியல் தயார் செய்யப்படுவதாக தெரிய வருகிறது.
விடுமுறை வழங்க வேண்டும்
அனைத்து மின்விநியோக வட்டங்களில் பணிபுரியும் கேங்மேன் பணியாளர்கள் உள்ளிட்ட ஒரு சில களப்பிரிவு ஊழியர்கள் அனைவருக்கும் வரும் 23-ம் தேதி நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்திடும் வகையில், தபால் வாக்கு செலுத்த உரிய ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது விடுமுறை வழங்க பிரிவு அலுவலர்களுக்கு அறிவுறுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.