படம்: ம.பிரபு 

தமிழகம்

தமிழகத்தில் தொடங்கியது வடகிழக்கு பருவமழை: எங்கெல்லாம் மிக கனமழை, கனமழை வாய்ப்பு?

ச.கார்த்திகேயன்

சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (அக்.16) நீலகிரி, கோவை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் வி.ஆர்.துரை செய்தியாளர்களிடம் கூறியது: “நாடு முழுவதிலும் இருந்து தென்மேற்கு பருவமழை இன்று விலகியுள்ளது.

இதன் விளைவாக, வடகிழக்குப் பருவமழையால் ஏற்படும் மழைப்பொழிவு தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால், கடலோர ஆந்திரப் பிரதேசம், ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா, மற்றும் கேரளா மற்றும் மாஹே ஆகிய பகுதிகளில் தொடங்கியுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்த காலக்கட்டத்தில் வட தமிழகத்தில் இயல்பை விட குறைவாகவும், தென் தமிழகத்தில் இயல்பை விட அதிகமாகவும், கடலோர தமிழகத்தில் இயல்பை ஒட்டியும் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த செப்டம்பர் 30-ம் தேதியுடன் நிறைவடைந்த தென்மேற்கு பருவமழை காலத்தில் 21 சதவீதம் மழை குறைவாக கிடைத்துள்ளது. தென்மேற்கு பருவமழைக் காலத்தில் கடந்த 2012-ல் 23 சதவீதம், 2016-ல் 20 சதவீதம் மழை குறைவாக பெய்துள்ளது.

தெற்கு கடலோர தமிழக பகுதிகளின் மேல் சுமார் 1.5 கிமீ உயரம் வரை ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. தெற்கு கடலோர தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து ஒடிசா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் வரை, மத்திய மேற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் வழியாக சுமார் 1.5 கிமீ உயரம் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளை (அக்.16) நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

ஈரோடு, திருப்பூர், விருதுநகர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், சிவகங்கை, கரூர், அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி, நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுக்கோட்டை, ராணிப்பேட்டை, கடலூர், திருவள்ளூர் மற்றும் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக் கூடும். இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.

17-ம் தேதி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, திருப்பூர், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், கடலூர், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ராமநாதபுரம், திருச்சி, திருநெல்வேலி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

18-ம் தேதி நீலகிரி, கோவை, ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

19-ம் தேதி நீலகிரி, கோவை, திருவண்ணாமலை, நாமக்கல், திருப்பூர் மற்றும் மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

20-ம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் மதுரை மாவட்டங்களிலும், 21-ம் தேதி நீலகிரி கோவை, தேனி மாவட்டங்களிலும் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை (அக்.16) வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கரூர் மாவட்டம் தோகமலை, மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காடில் தலா 11 செமீ, ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி, மருதம்பள்ளம், திருச்சி மாவட்டம் ஏழுப்பட்டியில் தலா 9 செமீ மழை பதிவாகியுள்ளது” என்று அவர் தெரிவித்துள்ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT