தமிழகம்

புதுச்சேரியில் அதிகரிக்கும் பாண்லே பால் தட்டுப்பாடு!

கடும் நிதி நெருக்கடியில் பால் உற்பத்தியாளர்கள் சங்கம்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: புதுச்சேரியில் பாண்லே பால் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. நிதி நெருக்கடியில் தள்ளாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. புதுச்சேரி அரசு இதை கண்டுகொள்ளுமா என கேள்வி எழுந்துள்ளது.

புதுவை அரசு சார்பு நிறுவனமான பாண்டிச்சேரி கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கம் (பாண்லே) தரமான பாலை விற்பனை செய்து வருகிறது. பாண்லே பாலை மக்கள் அதிக அளவில் விரும்பி பெறுகின்றனர்.

பால் மட்டுமின்றி தயிர், மோர், நெய், பால்கோவா, குல்பி, ஐஸ்கிரீம், லெஸ்ஸி உள்ளிட்ட பால் பொருட்களையும் பாண்லே தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

கடந்த சில நாட்களாக பாண்லே பால் பாக்கெட்டுகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. காலை 6 மணிக்கே பாண்லே பார்லர்கள் மற்றும் முகவர்கள் கடைகளில் மக்கள் காத்திருந்தும் பால் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

முகவர்களுக்கு 10 சதவீதம் பாலை வழங்காமல் பாண்லே நிறுத்தி உள்ளதால் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதுபற்றி விசாரித்தபோது, "புதுச்சேரிக்கு நாள் ஒன்றுக்கு சுமார் 1 லட்சம் லிட்டர் பால் தேவைப்படுகிறது. இதில் சுமார் 50 ஆயிரம் லிட்டர் மட்டுமே புதுச்சேரி உள்ளூர் பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாண்லே கொள்முதல் செய்கிறது. மீதம் உள்ள 50 ஆயிரம் லிட்டர் பாலை தமிழ்நாடு, ஆந்திரம் கர்நாடகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்ய வேண்டிய நிலை உள்ளது.

வெளி மாநிலங்களில் இருந்து பால் வருவது குறைந்தாலும், கொள்முதல் விலை விவகாரத்தில் சிக்கல் ஏற்பட்டாலும் உடனடியாக புதுவையில் பால் தட்டுப்பாடு ஏற்படுகிறது. கடந்த காலங்களிலும் இதே காரணத்தால் புதுவையில் கடும் பால் தட்டுப்பாடு ஏற்பட்டது.

பாண்லே நிறுவனம், கால்நடை வளர்ப்பவர்களிடம் இருந்து சராசரியாக லிட்டருக்கு ரூ.33-க்கு மட்டுமே பால் கொள்முதல் செய்கிறது. ஆனால் தனியார் பால் நிறுவனங்கள் ரூ.45-க்கு மேல் கொள்முதல் செய்கிறது.

இதனால் விவசாயிகள் பலர் பாண்லேவுக்கு பால் ஊற்றுவதை நிறுத்திவிட்டு, தனியார் நிறுவனங்களுக்கு பால் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். இதுவும் உள்ளூர் கொள்முதல் குறைய முக்கிய காரணமாக உள்ளது" என்று தெரிவிக்கின்றனர். இந்தச் சிக்கலைத் தாண்டி, பாண்லே நிறுவனம் கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.

பாண்லே நிறுவனம் சுமார் ரூ.80 கோடி நஷ்டத்தில் இயங்கி வருவதாகவும், அதனை சீரமைத்து இயக்க வேண்டும் என்று திமுக செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இச்சிக்கல் தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தொழிற்சங்க செயல்பாட்டாளர் ரமேசு கூறுகையில், "புதுச்சேரியில் 106 பால் கூட்டுறவு சங்கங்கள் மூலம் பால் கொள்முதல் செய்து குளிரூட்டும் நிலையங்கள் வாயிலாக பால் பண்ணைக்குக் கொண்டு வந்து, பதப்படுத்தி பொதுமக்களுக்கு விநியோகம் செய்து வரும் பாண்லே நிறுவனத்தின் பால் கொள்முதல் அளவு நாளுக்கு நாள் குறைந்து வருவதுடன், நஷ்டமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்த்தப்பட்டுள்ளதால், புதுச்சேரியில் பான்லே வழங்கும் கொள்முதல் விலை போட்டித்தன்மையற்றதாக மாறியுள்ளது. இதனால் பால் உற்பத்தியாளர்கள் தங்களது பாலை அருகில் உள்ள தமிழ்நாட்டுப் பால் நிறுவனங்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.

இதனால் பாண்லேவுக்கு கிடைக்கும் உள்ளூர் பாலின் அளவு தற்போது நாளொன்றுக்கு சுமார் 22 ஆயிரம் லிட்டராக குறைந்துள்ளது. உள்ளூர் பால் கொள்முதல் குறைந்ததால், பாண்லே தனது தேவையைப் பூர்த்தி செய்வதற்காக கர்நாடகா மாநிலத்தில் இருந்து அதிக விலை கொடுத்து கூடுதல் பால் கொள்முதல் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு கர்நாடகா பால் கூட்டமைப்பிலிருந்து (KMF) கொள்முதல் செய்யப்பட்ட பாலின் விலை லிட்டருக்கு ரூ.42.50 ஆக இருந்தது. பின்னர் அது ரூ.45 ஆக உயர்ந்தது. இந்நிலையில், 01.11.2026 முதல் கொள்முதல் விலையை லிட்டருக்கு மேலும் ரூ.8 உயர்த்தி ரூ.53 ஆக கர்நாடகா பால் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இதனால் பாண்லே நிறுவனத்துக்கு ஒரு லிட்டர் பாலுக்கு மேலும் ரூ.8 கூடுதல் செலவு ஏற்படுகிறது இது கூடுதல் நிதி சுமையாகியுள்ளது. ஏற்கெனவே பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலைக்கு இடையிலான வித்தியாசம், பதப்படுத்துதல் செலவு தொழிலாளர் செலவு விநியோகச் செலவு மற்றும் முகவர் கமிஷன் ஆகியவற்றால் மாதந்தோறும் சுமார் ரூ.1.80 கோடி அளவில் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.

கர்நாடகா பால் கொள்முதல் விலை உயர்வால் இனி மாதாந்திர மொத்த நஷ்டம் சுமார் ரூ.4.95 கோடியாக உயரக்கூடும். கர்நாடகா பால் கூட்டமைப்பிலிருந்து கொள்முதல் செய்த பாலுக்கான நிலுவைத்தொகை ரூ.7 கோடியாக உள்ளது. உள்ளூர் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய பால் கொள்முதல் தொகை ரூ.3 கோடியாக உள்ளது.

தொழிலாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்துக்கு வழங்க வேண்டிய தொகை ரூ.3 கோடி உள்ளது. மூலப்பொருள் மற்றும் பேக்கிங் பொருள் சப்ளையர்களுக்கான நிலுவை ரூ.5 கோடி(மொத்த நிலுவைத் தொகைரூ.18 கோடி)தொழிலாளர்களுக்கான கிராஜுவிட்டி (Gratuity) ரூ.7 கோடி உள்ளது.

தொழிலாளர்களுக்கு வழங்கப்படவேண்டிய ஈட்டிய விடுப்பு பணமாக்கல் ரூ.8 கோடி உள்ளது. உள்ளூர் பால் கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.3 கோடி நிலுவைத் தொகை செலுத்தப்படாததால், பால் உற்பத்தியாளர்களிடையே கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதுவும் பால் கொள்முதல் அளவு குறை வதற்கு ஒரு முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

மேலும் வங்கிகளில் பெறப்பட்ட கடன் ரூ. 15 கோடியும் நிறுவனத்துக்கு நிதிச் சுமையை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டு தணிக்கையில் நஷ்டம் ரூ. 23 கோடியாக இருந்தது. இந்தாண்டு தணிக்கை முடிந்தால் முழு விவரம் தெரியும். புதுச்சேரி துணைநிலை ஆளுநர், கூட்டுறவுத் துறை செயலர் பாண்லே நிதிநிலையை உடன் ஆய்வு செய்து, தேவையான மானியம், நிதியதுவி விரைந்து அறிவித்து நெருக்கடியில் இருந்து காக்க வேண்டும். ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் பாண்லேயில் பணிபுரிவதை கவனத்தில் கொள்ள வேண்டும்” என்கிறார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT