தமிழகம்

ரூ.3,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு: முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழுவதும் 2.22 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ரூ.3,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை ஆலந்தூரில் இன்று தொடங்கி வைக்கிறார்.

இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: உலக மக்கள் அனைவருக்கும் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்யும் வேளாண் தொழில் வளர்ச்சிக்கு உதவி வரும் கதிரவனுக்கும் விவசாயிகளின் உழைப்புக்கு உறுதுணையாக விளங்கும் கால்நடைகளுக்கும் உலக மக்களுக்கு உழைப்பால் உணவளித்து பசிப் பிணி போக்குவதையே வாழ்வு எனக் கொண்டுள்ள விவசாயிகளுக்கும் நன்றி கூறி குடும்ப உறவுகள் ஒன்றிணைந்து உலகத் தமிழர்களால் பன்னெடுங்காலமாகக் கொண்டாடப்படும் பாரம்பரியமான உன்னத விழா பொங்கல் திருநாள்.

இந்த ஆண்டு பொங்கல் திருநாள் ஜனவரி 15-ம் தேதி (வியாழக்கிழமை) தமிழ் மக்கள் வாழும் இடங்களில் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. பொங்கல் திருநாளை சிறப்பாகக் கொண்டாட 2 கோடியே 22 லட்சத்து 91,710 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வாழும் குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு ஆகியற்றுடன் ரூ.3,000 ரொக்கத்துடன் சேர்த்து வழங்கும் பணியை சென்னை ஆலந்தூரில் இன்று (வியாழக்கிழமை) காலை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

மற்ற மாவட்டங்களில் ரொக்கப் பணம் ரூ.3,000, பொங்கல் பொருள்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு அமைச்சர்கள் வழங்கி பணியை தொடங்கி வைப்பார்கள். பொங்கல் தொகுப்புடன் விலையில்லா வேட்டி, சேலைகளும் அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் வழங்கப்படும். இவ்வாறு அரசு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT