கோப்புப் படம்
சென்னை: தமிழகத்தில் உள்ள 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக அரிசி, சர்க்கரை, முழு நீள கரும்பு வழங்க ரூ.248.66 கோடி நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மேலும் பொங்கல் ரொக்கப்பரிசு தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆண்டுதோறும் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பாக தலா ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டு சட்டப்பேரவைத் தேர்தல் வருவதால் ரொக்கப்பரிசு வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.இதற்கிடையில், பொங்கல் பரிசை ரூ.5 ஆயிரமாக தர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
பெரும் எதிர்பார்ப்பு உள்ளதால், ரொக்கத் தொகை தொடர்பான ஆலோசனைகள் அரசு தரப்பில் நடைபெற்றாலும், முழு வடிவம் பெறவில்லை. இதுகுறித்து, ஜன.6-ம் தேதி நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினர் என 2 கோடியே 22 லட்சத்து 91,710 குடும்ப அட்டைகளுக்கு தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை மற்றும் ஒரு முழு நீளக் கரும்பு ஆகியவற்றை பரிசுத் தொகுப்பாக வநியோகிக்க ரூ.248 கோடியே 66 லட்சத்து 17,959 கோடி செலவு ஏற்படும் என கணிக்கப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில், ஒரு கிலோ அரிசி ரூ.25-க்கும், சர்க்கரை ரூ.48.55-க்கும், ஒரு கரும்பு தோராயமாக ரூ.38-க்கும் கொள்முதல் செய்யும் வகையில் உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதவிர பொங்கல் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளார்.
மண்டலங்களில் செயல்படும் நியாயவிலைக் கடைகளுடன் இணைக்கப்பட்டுள்ள குடும்ப அட்டைகளுக்கு ஏற்ப ஜன.2-ம் தேதிக்குள் டோக்கன்கள் அச்சிடப்பட்டு விநியோகத்துக்கு தயார் நிலையில் வைக்க வேண்டும். குடும்ப அட்டைதாரர்களுக்கு சுழற்சி முறையில் பொங்கல் தொகுப்பு வழங்க ஏதுவாக குடும்ப அட்டைகள், பிரிக்கப்பட்டு தெருவாரியாக பராமரிக்கப்பட வேண்டும். அதன் அடிப்படையில் பரிசுத்தொகுப்பு பெற வேண்டிய நாள், நேரம் குறிப்பிட்டு டோக்கன்களை விற்பனையாளர்கள் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளில் வழங்க வேண்டும்.
இந்த டோக்கன்களை எக்காரணம் கொண்டும் நியாயவிலைக் கடையை சாராத வேறு நபர்கள் அரசியல் சார்ந்த நபர்களை கெண்டு விநியோகிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து நியாய விலைக் கடைகளுக்கும் குடும்ப அட்டைகளுக்கு வழங்க வேண்டிய வேட்டி, சேலை உள்ளிட்ட தொகுப்பு பொருட்கள் அனைத்தும் அனுப்பப்பட்டு தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.