

அருண்ராஜ்
நாமக்கல்: "தவெக தலைமையில் மிகப் பெரிய கூட்டணி அமைய உள்ளது. அந்தக் கூட்டணி வெற்றி பெற்று முதல்வராக விஜய் தலைமையில் ஆட்சி அமையும்" என அக்கட்சியின் கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்தார்.
திருச்செங்கோடு அடுத்த மல்லசமுத்திரத்தில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் தவெக கொள்கை பரப்பு பொதுச் செயலாளர் கே.ஜி.அருண்ராஜ் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறியது: “தவெக தலைவர் விஜய்யின் அடுத்த மக்கள் சந்திப்பு குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக விரைவில் வெளிவரும். சேலம் கூட்டத்துக்கு பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டதால் நடைபெற முடியாமல் போய்விட்டது.
கூட்டணி குறித்து முடிவு செய்ய மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் குழு அமைக்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதற்கான குழுவை தலைவர் விரைவில் அறிவிப்பார். தவெக தலைமையில் மிகப் பெரிய கூட்டணி அமைய உள்ளது. அந்தக் கூட்டணி தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் விஜய் தலைமையில் ஆட்சி அமையும். எங்கள் தலைவர் முதல்வராக பதவியேற்பார்" என்றார்.
பின்னர், ‘அதிமுக - பாஜகவுடன் கூட்டணி அமைய வாய்ப்புள்ளதா?’ என்ற கேள்விக்கு, “நிச்சயமாக அதற்கான வாய்ப்பு இல்லை. ஏற்கெனவே எங்களது கொள்கை எதிரி யார்? அரசியல் எதிரி யார் என்பதை தெளிவாக அறிவித்து விட்டோம். அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் கிடையாது.
கூட்டணி குறித்து ஏற்கெனவே பலமுறை தெரிவித்து விட்டோம். தவெக தலைமையை ஏற்று வருகிற கட்சிகளுடன்தான் கூட்டணி. எங்கள் தலைவரை முதலமைச்சராக ஏற்கும் கட்சிகளுடன்தான் கூட்டணி. திமுக, பாஜகவை தவிர யார் எங்கள் தலைவரை முதலமைச்சராக ஏற்று கூட்டணிக்கு வந்தாலும் அரவணைத்து செல்வோம்” என்றார்.
பின்னர், ‘காங்கிரஸ் கட்சி உடன் கூட்டணி என பேச்சு அடிபடுகிறது’ என கேட்டபோது, ‘உரிய நேரத்தில் கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளிவரும். ஒரு அரசியல் கட்சி எப்பொழுது என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதை அந்த கட்சி தான் முடிவு செய்யும். தேர்தல் வர இன்னும் மூன்று மாதங்கள் முழுமையாக உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் அவரவர்கள் நிலைப்பாட்டிற்கு தகுந்தாற்போல் கூட்டணி அமைப்பர்” என்றார்.
இதனைத் தொடர்ந்து, ‘நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் குறித்து காட்டமான விமர்சனங்களை வைத்து வரும் நிலையில் அதற்கு எந்தவிதமான மறுப்பும் சொல்லாமல் மௌனம் காக்கிறீர்களே ஏன்?’ என்ற கேள்விக்கு, ‘ஈரோடு கூட்டத்தில் விஜய் சொன்னது போல், நீங்கள் எதிர்க்க வேண்டும் என நினைப்பதற்காக நாங்கள் எதிர்க்க முடியாது. எனவே சீமான் குறித்து நான் கருத்து சொல்ல விரும்பவில்லை” என்றார்.