சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பெரும்பாலான விரைவு ரயில்களில் முன்பதிவு டிக்கெட்கள் 5 நிமிடங்களிலேயே விற்று தீர்ந்தன.
அடுத்த ஆண்டு ஜன.15-ம் தேதி (வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. ஜன.14-ம் தேதி போகி பண்டிகை, 16-ம் தேதி மாட்டுப்பொங்கல், 17-ம் தேதி காணும் பொங்கல் ஆகிய பண்டிகைகளும் அடுத்தடுத்து வரவுள்ளன. இந்த பண்டிகையை முன்னிட்டு, சென்னை உள்பட பெருநகரங்களில் இருந்து சொந்த ஊர்களுக்கு ரயில்களில் செல்ல வசதியாக, 60 நாட்கள் முன்னதாகவே டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.
அதன்படி, ஜன.13-ம் தேதி ஊருக்கு புறப்பட டிக்கெட் முன்பதிவு நேற்று காலை 8 மணிக்கு ஐஆர்சிடி.சி இணையதளம் வழியாகவும், முன்பதிவு மையங்கள் மூலமாகவும் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்றது. சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு புறப்படும் பெரும்பாலான ரயில்களில் 5 முதல் 10 நிமிடங்களில் டிக்கெட் முன்பதிவு முடிந்து, காத்திருப்போர் பட்டியலுக்கு வந்தது.
குறிப்பாக மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய ஊர்களுக்கு புறப்படும் பாண்டியன், நெல்லை, பொதிகை, முத்துநகர் விரைவு ரயில்களின் இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகளில் பயணிக்க முன்பதிவு 3 முதல் 5 நிமிடங்களுக்குள் முடிந்தது.
இதுபோல, சென்னை சென்ட்ரலில் இருந்து கோயம்புத்தூருக்கு புறப்படும் நீலகிரி, சேரன் ஆகிய விரைவு ரயில்களிலும் முன்பதிவு முடிந்து, “ரெக்ரெட்” என காட்டியது. அதே நேரத்தில், பகல் நேர ரயில்களில் இருக்கைகள் இருந்தன. முன்பதிவு மையங்களில் பொதுமக்கள் நீண்டநேரம் வரிசையில் காத்திருந்தனர் மேலும் ஜன.15ம் தேதிக்கு சிறப்பு ரயில்களை அறிவிக்கவும் கோரிக்கை எழுந்துள்ளது.