சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு வருகைதந்த தமிழக பாஜகவின் புதிய மேலிட பொறுப்பாளர் ராம் மாதவ்வை, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வரவேற்றார். உடன், பொன். ராதாகிருஷ்ணன் | படம்: எல்.சீனிவாசன்
சென்னை: ‘இந்தியாவை வங்கதேசம், நேபாளம் போன்று மாற்ற வேண்டும் என்பதுதான் ராகுல் காந்தியின் நோக்கம். அவரை காங்கிரஸில் இருந்து அவரது கட்சியினரே வெளியேற்றும் காலம் வரும்’ என பாஜக மூத்த தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் விமர்சித்துள்ளார்.
தமிழக பாஜகவுக்கு புதிய மேலிடப் பொறுப்பாளராக ராம் மாதவ், மேலிட இணை பொறுப்பாளர்கள் நிர்மல் குமார் சுரானா, டி.கே.அருணா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சென்னை, தி.நகரில் உள்ள மாநிலத் தலைமை அலுவலகமான கமலாலயத்துக்கு நேற்று அவர்கள் வருகை தந்தனர். மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்ததலைவர் பொன்.ராதாகிருஷ்ணன், ஆந்திர மாநில பாஜகவின்மேலிட இணை பொறுப்பாளர் வானதி சீனிவாசன், முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் உள்ளிட்டோர் புதிய நிர்வாகிகளை வரவேற்றனர்.
அதைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியதாவது: தமிழகத்துக்கான புதிய மேலிடப்பொறுப்பாளரான ராம் மாதவ், எந்த மாநிலத்தில் எல்லாம் பொறுப்பு வகித்தாரோ, அங்கெல்லாம் பாஜகவை ஆட்சியில் அமர்த்தினார். ‘தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த வேண்டும். நமது பலத்தை நிரூபிக்க வேண்டும்’ என்று ராம் மாதவ் கூறியுள்ளார். தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களின் தலைமை இடத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால சாதனையைப் போற்றும் வகையில் ‘சேவை ஜோதி பேரணி’அக்.7-ல் (நாளை) நடைபெறுகிறது.
மேலும், அக்.11-ம் தேதி தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, சென்னை மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். இந்தியாவை வங்கதேசம், நேபாளம் போன்று மாற்ற வேண்டும் என்பதுதான் ராகுல் காந்தியின்நோக்கம். ராகுல் காந்தியை காங்கிரஸில் இருந்து அக்கட்சியினரே வெளியேற்றும் காலம் வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.