சென்னை: தமிழக அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் 1,058 விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக 2017-ம் ஆண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) நடத்திய தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக அமலாக்கத் துறை விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
இந்தத் தேர்வை சுமார் 1.33 லட்சம் பேர் எழுதிய நிலையில், முடிவுகள் வெளியானதும் மதிப்பெண் முறைகேடு, பணம் பெற்று தகுதியற்றவர்களை தேர்ச்சிபெறச் செய்தது உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. இதையடுத்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். அதில், தேர்வர்களிடம் ரூ.14 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை வசூலித்து, விடைத்தாள்களை டிஜிட்டல் முறையில் மாற்றி கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டது தெரியவந்தது. இதன்மூலம் தகுதி இல்லாத 262 பேர் விரிவுரையாளர் பணிக்கு தகுதி பெற்றவர்களாக காட்டப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது.
இந்த வழக்கில் 156 பேருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டதுடன், தரகர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் உள்பட 19-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். சிலர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. இதற்கிடையே, சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் நடைபெற்றது தொடர்பாக அமலாக்கத்துறை தனியாக விசாரணை நடத்தி, கடந்த 23-ம் தேதி சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர் உள்ளிட்ட 21 இடங்களில் சோதனை நடத்தியது.
இந்த சோதனையில் ரூ.13.18 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதுடன், 56 வங்கிக்கணக்குகள் மற்றும் 2 டீமேட் கணக்குகள் முடக்கப்பட்டன. மேலும், குற்றம்சாட்டப்பட்டவர்களுடன் தொடர்புடைய 36 அசையா சொத்துகளின் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவற்றின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.20 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என அமலாக்கத்துறை தெரிவித்து உள்ளது.