சென்னை: தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 14 அடுக்குமாடி குடியிருப்பு களில் வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புறங்களில் அடுக்கு மாடி குடியிருப்பு கலாச்சாரம் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற குடியிருப்புகளில் வசிப்போர் சிலர் வாக்குச்சாவடிகளுக்குச் சென்று வாக்களிக்க தயக்கம் காட்டுகின்றனர். பல இடங்களில் இதுபோன்ற குடியிருப்புகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர்.
அங்கு ஒரு வாக்குச்சாவடி அமைக்கும் அளவுக்கு வாக்காளர்கள் இருப்பதால், இதுபோன்ற அடுக்கு மாடிகுடியிருப்புகளில் வாக்குச் சாவடிகளை அமைக்க தேர்தல் ஆணையம் பல ஆண்டுகளாக ஆலோசித்து வந்தது.
அதன்படி கடந்த ஆண்டு நடைபெற்ற வாக்காளர் பட்டியல்சிறப்பு தீவிர திருத்தத்தின்போது, காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருஅடுக்குமாடி குடியிருப்பில் வாக்குச்சாவடி உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்-2026-ல் தமிழகம் முழுவதும் 12 தனியார் அடுக்கு மாடிகுடியிருப்புகளிலும், ஒரு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியஅடுக்கு மாடி குடியிருப்பிலும் என 13 அடுக்கு மாடி குடியிருப்புகளில் வாக்குச்சாவடிகள் உருவாக்கப்பட்டன.
5 மாவட்டங்கள்: அதேபோன்று, தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் 4 வாக்குச்சாவடிகளும், சென்னையில் 5 வாக்குச்சாவடிகளும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் தலா 2 வாக்குச்சாவடிகளும், மதுரையில் ஒருவாக்குச்சாவடியும் அமைக்கப் பட்டுள்ளன.