வெள்ளிமலையில் உள்ள வாக்குச்சாவடி.
ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் உள்ள வெள்ளி மலை வனக் கிராமத்தில் உள்ள ஐந்தே வாக்காளர்களுக்காக வாக்குச்சாடி மையம் அமைக்கப்படவுள்ளது.
இவர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டி தேர்தல் ஆணையம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. தமிழக - கேரள எல்லையில் தேனி மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள ஆண்டிபட்டி தொகுதி மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரம் வரை நீண்டுள்ளது.
குறிப்பாக க.மயிலை ஒன்றியத்தில் தும்மக்குண்டு ஊராட் சிக்கு உட்பட்ட வெள்ளிமலை வனக் கிராமம் இந்த தொகுதியின் கடைசி பகுதியாக உள்ளது. இங்கு காபி, கிராம்பு, ஏலக்காய் எஸ்டேட்டுகள் அதிகம் உள்ளன.
தொடக்கத்தில் தமிழக தொழிலாளர்கள் இங்கு அதிகம் பணிபுரிந்தனர். 1990-ம் ஆண்டு காலகட்டத்தில் 1,200 வாக்காளர்கள் வரை இருந்தனர். இங்கு பதிவாகும் வாக்குகளே தும்மக்குண்டு ஊராட்சித் தலைவரை நிர்ணயம் செய்யும் அளவுக்கு சக்திவாய்ந்த வாக்காளர் எண்ணிக்கை இருந்தது.
இந்நிலையில் இப்பகுதி புலிகள் காப்பகமாக அறிவிக்கப் பட்டதால் வனத்துறையினரின் நெருக்கடி அதிகரித்தது. இதனால் இப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் பலரும் படிப்படியாக இடம்பெயரத் தொடங்கினர்.
மேலும் தேயிலைத் தோட்டங்களுக்கு வடமாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்களும் அதிகஅளவில் வரத் தொடங்கினர். இதனால் இங்குள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை குறைந்து கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 6 ஆக மாறியது.
இந்நிலையில் எஸ்ஐஆர் பணியின்போது இரட்டைப் பதிவை காரணம் காட்டி ஒரு வாக்காளரின் பெயர் நீக்கப்பட்டது. இதனால் வாக்காளர்களின் எண்ணிக்கை 5 ஆக குறைந்தது.
இருப்பினும், அவர்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றும் வகையில், இங்குள்ள அரசு உதவி பெறும் ஆரம்பப் பள்ளியில் வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து இங்குள்ள விவசாயிகள் கூறும்போது, 5 ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதி புலிகள் காப்பக பகுதியாக அறிவிக்கப்பட்டது. அதில் இருந்தே வனத்துறையினர் பல்வேறு நெருக்கடிகளை ஏற்படுத்தியதால், விவசாயிகள் பலரும் இடம்பெயரத் தொடங்கினர்.
மேலும் வடமாநிலத் தொழிலாளர்கள் வருகை அதிகரிப்பால் காபி தோட்டத்தில் பணிபுரிந்தவர்களும் வெளியேறி விட்டனர். வெள்ளிமலையில் இருந்து 12 கி.மீ. தூரத்தில் இப்பகுதிக்கான வாக்குச்சாவடி மையம் உள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரையே வெளியாட்கள் இங்கு வர அனுமதிக்கப்படுவர் என்றனர்.
இதுகுறித்து ஆட்சியர் ரஞ்ஜீத்சிங் கூறும்போது, அங்கு பணிபுரிபவர்கள் பெரும்பாலும் வெளி மாநிலத் தொழிலாளர்கள்தான். அவர்களுக்கு இங்கு வாக்குரிமை இல்லை.
அங்கு 5 பேருக்கு மட்டுமே வாக்கு உள்ளதால் அவர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார். ஒருகாலத்தில் எம்ஜிஆர், ஜெயலலிதா போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி ஆண்டிபட்டி என்பது குறிப்பிடத்தக்கது.