

கரூர்: கரூரில் கடந்தாண்டு செப். 27-ம் தேதி நடந்த தவெக பிரச்சாரக் கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தவெக தலைவர் விஜய் 3 முறை டெல்லி சிபிஐ அலுவலத்தில் ஆஜரானார்.
இதேபோல, கரூர் சம்பவத்தின்போது மருத்துவமனைக்கு அன்று இரவே சென்றிருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.
இதனால், அவரிடமும் விசாரணை நடத்த முடிவு செய்த சிபிஐ அதிகாரிகள், அவரை மார்ச் 17-ம் தேதி டெல்லி அலுவலகத்தில் ஆஜராக சம்மன் அனுப்பி இருந்தனர். அதன்படி, விசாரணைக்கு ஆஜராக அவர் நேற்று சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.