சென்னை: தூத்துக்குடியில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் உயிரிழந்த நிலையில், தமிழகத்தில் காவல் மரணங்கள் தொடர் கதையாகி வருவதாக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி: தூத்துக்குடியில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் அருணாச்சலம், காவலர்களின் தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழந்திருப்பது வேதனையளிக்கிறது.
போலீஸார் தனக்கு இழைத்த அநீதியை தனது இறுதி நிமிடங்களில் அருணாச்சலமே எடுத்து சொன்னதைப் பார்க்கும்போது நெஞ்சம் கலங்குகிறது. காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர், கடும் நடவடிக்கைகளை எடுக்காமல் மவுனம் காப்பதால், இத்தகைய சம்பவங்கள் தொடர்கின்றன.
திமுக துணை பொதுச்செயலாளர் கனிமொழி: நாகர்கோவிலைத் தொடர்ந்து தூத்துக்குடியிலும் காவல்துறையின் சித்ரவதைக்கு உள்ளாகி இளைஞர் ஒருவர் உயிரிழந்திருக்கும் செய்தி வேதனையளிக்கிறது.
காவல்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் உட்பட பல அமைச்சர்களும், அதிகாரிகளும் திரைப்படம் பார்க்க விடுப்பில் சென்றுள்ளதால், தமிழகத்தில் ‘அரசு’ என்ற ஒன்று உள்ளதா? என்பதே சந்தேகம்தான்.
தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்: தூத்துக்குடியில் இளைஞர் அருணாச்சலம் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தவெக ஆட்சி அமைந்த குறுகிய காலத்திலேயே காவல் மரணங்கள் தொடர்கதையாக மாறிவிட்டன.
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்: சட்டத்தை பாதுகாக்க வேண்டிய காவல் அதிகாரிகள், சட்டத்தை தன் கையில் எடுத்து காவல் மரணங்களை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம்? முதல்வர் இவ்விவகாரத்தில் தலையிட்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாமக தலைவர் அன்புமணி: ஏற்கெனவே நாகர்கோவில் சிறையில் விசாரணைக் கைதி சிறைத்துறையினரால் தாக்கி கொல்லப்பட்டதாக எழுந்த குற்றச்சாட்டுகளின் பதற்றம் தீரும் முன்பே இன்னொரு விசாரணை கைதி மர்மமான முறையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது. இந்த உயிரிழப்பு குறித்து சிபிஐ விசாரணைக்கு அரசு ஆணையிட வேண்டும்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தமிழக காவல்துறையின் காவலில் நடைபெறும் இத்தகைய உயிரிழப்புகள் அப்பட்டமான மனித உரிமை மீறலாகும். தூத்துக்குடியில் நடைபெற்றிருக்கும் காவல் மரண வழக்கை விரிவாக விசாரித்து, தொடர்புடையவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்: தூத்துக்குடி மாவட்டத்தில் போலீஸ் காவலில் அருணாச்சலம் என்ற இளைஞர் உயிரிழந்திருப்பது கண்டனத்துக்குரியது. இந்த தாக்குதல் குறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து: காவல்துறையின் செயல்பாடுகள் பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளன.
மநீம துணைத்தலைவர் ஆர்.தங்கவேலு: காவல் விசாரணை மரணங்களில் தமிழக அரசின் தொடர் அலட்சிய போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.