துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் வாக்களிப்பு
புதுச்சேரி: புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தலையொட்டி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்ட தலைவர்கள் வாக்களித்தனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை தேர்தல் வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. இதையொட்டி ராஜ்பவன் தொகுதிக்குட்பட்ட சுகாதாரத் துறை இயக்குநகரத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தனது குடும்பத்தினருடன் சென்று வாக்கு செலுத்தினார்.
அப்போது அவர் கூறும்போது, ‘‘புதுச்சேரியில் உள்ள அனைத்து குடிமக்களும் தங்களது வாக்குரிமையை செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றேன்’’ என்றார்.
மணவெளி சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான சட்டப்பேரவை தலைவர் செல்வம் தவளக்குப்பத்தில் உள்ள ஆச்சாரியா பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடியில் வாக்களித்தார்.
முன்னாள் முதல்வர் நாராயணசாமி மிஷன் வீதியில் உள்ள வ.உ.சி பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை செலுத்தினார். அப்போது நாராயணசாமி கூறுகையில், ‘‘புதுச்சேரியில் திமுக, காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் எழுச்சி உள்ளது. ஸ்டாலின், ராகுல் புதுச்சேரிக்கு வந்து பிரச்சாரம் செய்து வாக்குறுதி அளித்ததின் எதிரொலியாக மக்கள் மனதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் புதுச்சேரியில் காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி அமைக்கும்’’ என கூறினார்.
மண்ணாடிப்பட்டு தொகுதி வேட்பாளரான உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், தனது மனைவியுடன் வந்து திருக்கனூரில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் வாக்களித்தார். பின்னர் அவர், ‘‘எங்களுக்குரிய வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.
புதுச்சேரியில் மீண்டும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும். ஏற்கெனவே முதல்வர் புதுச்சேரி மாநில அந்தஸ்து தொடர்பாக பிரதமரிடம் கோரிக்கை வைத்திருக்கின்றார். யூனியன் பிரதேசமாக இருக்கின்ற காரணத்தால் அதனுடைய சாதக பாதகங்களை ஆராய்ந்து உரிய நேரத்தில் உரிய முடிவை பிரதமர் எடுப்பார்.
பிரதமர், மத்திய உள்துறை அமைச்சர் புதுச்சேரிக்கு வருகை தந்து தங்களின் கவனத்தை இங்கே செலுத்தியிருப்பதன் நோக்கத்தை மக்கள் புரிந்து கொண்டுள்ளார்கள். அதனால் தான் மக்கள் ஆர்வமாகவும், மகிழ்ச்சியுடன் வாக்களித்துவிட்டு செல்கின்றனர்.
நான் முதல்வராவது குறித்து பிரதமர், உள்துறை அமைச்சர், கட்சி தலைவர், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர் முதல்வர் ரங்கசாமி சேர்ந்து உரிய நேரத்தில் உரிய முடிவை எடுப்பார்கள்” என தெரிவித்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவரும், வில்லியனூர் தொகுதி திமுக வேட்பாளருமான சிவா உருளையன்பேட்டை தொகுதி இளங்கோ நகரில் உள்ள கூட்டுறவு சங்க கட்டிடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில், குடும்பத்துடன் வந்து வாக்களித்தார். தொடர்ந்து அவர் கூறும்போது, “ஜனநாயக கடமையை நிறைவேற்றும் வகையில் மக்கள் 100 சதவீத வாக்களிக்க வேண்டும்.
புதுச்சேரியில் ஒரு மாற்றத்தை நோக்கி நல்ல ஆட்சி அமைய வேண்டும் என்று மக்கள் திரண்டு வாக்களித்து வருகின்றனர். நிச்சயமாக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி ஆட்சியமைக்கும். தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மிகப்பெரிய மாற்றத்தை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வேண்டும் என்று திமுக எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் குரல் எழுப்பி வருகின்றனர். திமுக தலைவரும் அதை வலியுறுத்து வருகிறார்” என்றார்.
பாஜக வேட்பாளர் ராமலிங்கம் கூறுகையில், ‘‘தன்னுடைய ஜனநாயக கடமையை அனைவரும் சிறப்பாக செய்ய வேண்டும். தேர்தல் துறை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். முன்பெல்லாம் வாக்கு சதவீதம் குறைவாக இருக்கும். இம்முறை எஸ்ஐஆர்-க்கு பிறகு 90 சதவீதத்தை தாண்டும் என்று நான் நினைக்கின்றேன். புதிய வாக்காளர்கள் விழிப்போடு இருக்கிறார்கள்.
பலர் வெளியூர்களில் இருந்து வந்துள்ளனர். வாக்களிப்பது குறித்து நல்ல விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற உணர்வு வந்துள்ளது” என கூறினார்.
லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தனது மனைவியுடன் ரெட்டியார்பாளையம் புகுதியில் உள்ள இமாகுலேட் பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களித்தார். இதேபோல் அமைச்சர்கள் உள்ளிட்ட தலைவர்கள் வாக்குகளை செலுத்தினர்.