ஈரான் மீதான போரை நிறுத்த பாக்., சீனா எடுத்த முயற்சி வரவேற்புக்குரியது: இந்திய கம்யூ.

‘மோடி அரசின் போக்கு வன்மையாக கண்டிக்கதக்கது’
ஈரான் மீதான போரை நிறுத்த பாக்., சீனா எடுத்த முயற்சி வரவேற்புக்குரியது: இந்திய கம்யூ.
Updated on
1 min read

சென்னை: அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய போரை நிறுத்த பாகிஸ்தான் - சீனா எடுத்த முயற்சி வரவேற்புக்குரியது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது கடுமையான தாக்குதலை நடத்தி வந்தன. ஒரு நாகரிகம் அழிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் மிரட்டல் பேச்சு ஏகாதிபத்திய போர் வெறியின் உச்சக்கட்டமாகும். இந்த நிலையில் பாகிஸ்தான் எடுத்த முயற்சியின் காரணமாகவும், சீனாவின் இறுதிகட்ட தலையீட்டாலும், அமெரிக்க மற்றும் ஈரான் நாடுகள் சமரச உடன்பாட்டை எட்டின.

இரண்டு வார காலம் தற்காலிக போர் நிறுத்தத்தையும் அவை அறிவித்துள்ளன. தொடர்ந்து அமைதிப் பேச்சுவார்த்தை இஸ்லாமாபாதில் நாளை நடைபெற உள்ளது.

பாகிஸ்தான் மற்றும் சீனாவின் இந்த முயற்சியை வரவேற்புக்குரியது. அதேநேரம் இந்தியாவின் மவுனம், இந்தியா இதுவரை கடைபிடித்து வரும் அணிசேரா கொள்கைக்கு நேர் எதிரானதாகும். ஆதிக்க மனப்பான்மையோடு பிற நாடுகளை அடிமைப்படுத்த முயற்சிக்கும் ஏகாதிபத்திய நாடுகளுக்கு துணை போவதாகும். ஒன்றிய மோடி அரசின் இப்போக்கு வன்மையாக கண்டிக்கதக்கது.

உலக சமாதானத்துக்கும், அமைதிக்கும், நிலைத்தன்மைக்கும் நெருக்கடி ஏற்பட்டிருக்கும் இந்நேரத்தில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா வெறும் பார்வையாளராக இருப்பது, உலக சமாதானம், ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் அணிசேராமையை அடிப்படையாகக் கொண்ட இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு மிகப் பெரிய பின்னடைவாகும்.

அமைதியை நிலைநாட்ட போர் நிறுத்த முயற்சிக்கு, சமத்துவமான, ஏகாதிபத்திய எதிர்ப்பு, வெளியுறவுக் கொள்கையின் அடிப்படையில் செயல்பட்டு இருக்க வேண்டிய ஒன்றிய மோடி அரசின் மவுனம், ஒருச் சார்பு நடவடிக்கையாகும். இந்த ஏகாதிபத்திய சார்பு நிலை, இந்தியாவின் செல்வாக்கை, மரியாதையை உலக அரங்கில் வெகுவாக குறைத்திருக்கிறது.

இந்தத் தருணத்தில் ஒன்றிய பாஜக அரசு தனது செயல்பாடுகளை தீவிரப்படுத்தி ஈரான் மற்றும் இதர வளைகுடா நாடுகளில் சிக்கி உள்ள இந்திய மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். தூதரக உதவியுடன் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

மேலும், போர் பதற்றத்தை தனித்து நிரந்தர போர் நிறுத்தத்தை கொண்டு வருவதற்கான தூதரக ரீதியான, அரசியல் ரீதியான முன்முயற்சிகளை தீவிரமாக முன்னெடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு ஒன்றிய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது" என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீதான போரை நிறுத்த பாக்., சீனா எடுத்த முயற்சி வரவேற்புக்குரியது: இந்திய கம்யூ.
“எனக்கு நிதிஷ் குமார் நிலை ஏற்படாது” - புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உறுதி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in