சென்னை: தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீதான விவாதத்தின்போது ஆதரித்தும், எதிர்த்தும், நடுநிலை நிலைப்பாட்டுடனும் பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகள் பேசினர். அதன் விவரம் வருமாறு:
காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ்குமார்: இந்திய அரசியல் சாசனத்தையும், மதச்சார்பின்மையையும், சமூகநீதியையும் பாதுகாக்கும் பொறுப்புணர்வோடு காங்கிரஸ் கட்சி தவெக அரசுக்கு தனது ஆதரவை வழங்குகிறது.
இந்த ஆதரவு அரசியல் லாபத்துக்கான ஆதரவல்ல. இது ஜனநாயகத்தைப் பாதுகாத்து, மக்களின் தீர்ப்பை மதிக்கும் ஆதரவாகும். தமிழகத்தில் பாஜகவின் மறைமுக ஆட்சியை அனுமதிக்கக் கூடாது என்ற உறுதியின் அடிப்படையில் ஆதரவு அளிக்கப்பட்டுள்ளது.
பாமக உறுப்பினர் சவுமியா அன்புமணி: தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அனைத்து சமூகங்களுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும். முழு மதுவிலக்கு மற்றும் போதைப்பொருட்களை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும்.
நீர் மேலாண்மைத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும். தனியார் வேலைவாய்ப்புகளில் 80 சதவீதத்தை தமிழக இளைஞர்களுக்கு ஒதுக்க சட்டமியற்ற வேண்டும். மேலும், தமிழக நலனுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொண்டால் பாமக எதிர்க்கும். இன்றைய வாக்கெடுப்பிலிருந்து பாமக விலகி நிற்கிறது.
விசிக உறுப்பினர் வன்னியரசு: பாஜகவின் மறைமுக செயல்திட்டமான ஆளுநர் ஆட்சியைத் தடுக்கும் விதமாக தவெகவுக்கு ஆதரவு அளிக்கிறோம். விசிக ஆதரவைப் பெற்ற அரசு மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றி, மாநில உரிமைகளைக் காக்க வேண்டும்.
கடந்த அரசு ஆணவப் படுகொலைகளை தடுக்க சிறப்புச் சட்டம் இயற்ற நீதிபதி பாட்ஷா தலைமையில் ஆணையம் அமைத்துள்ளது. இந்த ஆணையத்தின் அறிக்கையை பெற்று விரைவில் சட்டம் இயற்ற வேண்டும்.
இந்திய கம்யூ. உறுப்பினர் டி.ராமச்சந்திரன்: மாநில உரிமைகளை மத்திய பாஜக அரசு தொடர்ச்சியாக பறித்துக் கொண்டிருக்கிறது. இது ஜனநாயகத்துக்கு பேராபத்தாகும்.
மாநில உரிமைகள், சமூகநீதி, மதச்சார்பின்மை பாதுகாக்கப்பட வேண்டும். வகுப்புவாத சக்தியான பாஜக எந்த காரணத்திலும் பின்புற வாசல் வழியாக (ஆளுநர் ஆட்சி) தமிழகத்தில் கால் பதித்துவிடக்கூடாது என்ற நோக்கத்துக்காக இந்த அரசை ஆதரிக்கிறோம்.
மார்க்சிஸ்ட் உறுப்பினர் செல்லசுவாமி: மறைமுகமாக குடியரசுத் தலைவர் ஆட்சியை அமைக்கும் சதித் திட்டத்தை நிறைவேற்றும் வகையில் ஆளுநர் செயல்பட்டார். இந்த ஆபத்திலிருந்து, தமிழகத்தை காப்பாற்றும் நோக்கத்தோடும் இந்த அரசுக்கு ஆதரவை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த அரசு மக்கள் நலத் திட்டங்களை அறிவிக்கும்போது அதை வரவேற்போம். அதேசமயம் பாதகம் அமைக்குமெனில் அதை எதிர்ப்போம்.
மஜக உறுப்பினர் தமிமுன் அன்சாரி: தமிழகத்தில் ஒரு முற்போக்கான ஜனநாயகத்தை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை நம் எல்லோருக்கும் உள்ளது.
முதல்வராகப் பொறுப்பேற்ற 4 நாட்களில் பல்வேறு நல்ல விஷயங்களை முன்னெடுத்து இருப்பதற்கு எனது வாழ்த்துகள். எனினும் முதல்வரின் நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எனது எதிர்நிலைப்பாட்டை தெரிவித்துக்கொள்கிறேன்.
பாஜக உறுப்பினர் எம்.போஜராஜன்: முதல்வரின் நம்பிக்கை தீர்மானத்தில் பலர் உணர்ச்சிவசமாக, பாஜகவுக்கு எதிரான பிரச்சாரக் கூட்டம்போல், மாண்பை மீறிப் பேசிவிட்டார்கள்.
கடந்த காலத்தில் இரண்டே 2 உறுப்பினர்களைக் கொண்டு நாடாளுமன்றத்தில் செயல்பட்டு, இன்றைக்கு பல மாநிலங்களில் ஆளுங்கட்சியாக மாறியிருக்கிறோம். நல்ல திட்டங்களுக்கு பாஜக ஆதரவாக இருக்கும். இந்த தீர்மானத்தில் பாஜக நடுநிலை வகிக்கிறது.
உறுப்பினர் காமராஜ்: முதல்வர் விஜய்க்கு எனது ஆதரவு 5 ஆண்டுக்காலமும் இருக்கும். சிறப்பான ஆட்சியை தவெக அரசு வழங்கும். தமிழகம் முழுவதையும் பாதுகாக்கும் முதல்வர் விஜய் என்னையும் பாதுகாப்பார் என்று நம்புகிறேன் இவ்வாறு அவர்கள் பேசினர்.
இதுதவிர, தவெக தீர்மானத்துக்கு ஆதரவாக ஐயூஎம்எல் உறுப்பினர் ஏ.எம்.ஷாஜ ஹானும், எதிராக கொமதேக உறுப்பினர் நித்தியானந்தனும் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர்.
முன்னதாக அமமுகவிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ காமராஜ் பேசும்போது, அவர் பேசிய சில கருத்துகளுக்கு இபிஎஸ் தரப்பு அதிமுகவினர் எதிர்ப்புத் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.