“எஸ்.ஐ.ஆர் பதிவுக்கு 15 நாட்கள் கூடுதல் அவகாசம் வழங்க வேண்டும். எஸ்.ஐ.ஆர் குறித்த தவறான கருத்துக்களை அரசியல் கட்சிகள் பரப்பக் கூடாது” என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார்.
ராஜபாளையத்தில் புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியது: “1997-ம் ஆண்டு தொடங்கப்பட்ட புதிய தமிழகம் கட்சியின் 7-வது மாநில மாநாடு வரும் ஜனவரி மாதம் மதுரையில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டின் நோக்கம் குறித்து தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரச்சாரம் செய்து வருகிறேன்.
கிராமப் பகுதிகளில் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக ஊராட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி என்ன ஆனது என தெரியவில்லை.
இதுகுறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும். சுந்தர்ராஜபுரம் கிராமத்தில் கள்ளச்சாராயம் மற்றும் கஞ்சா விற்பனை நடக்கிறது. இதனால் ராஜபாளையம் முழுவதும் போதைப்பழக்கம் மற்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுகிறது.
போலி வாக்காளர்கள் நீக்கப்பட வேண்டும் என்பதால் எஸ்ஆரை அனைவரும் ஆதரிக்க வேண்டும். கூடுதலாக 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டும். வாக்குச்சாவடி அலுவலர்கள் மூலமாக மட்டுமே எஸ்.ஐ.ஆர் படிவத்தை வழங்க வேண்டும். அரசியல் கட்சியினர் எஸ்.ஐ.ஆர்-க்கு எதிரான கருத்தை மக்களிடையே பரப்ப வேண்டாம்.
வத்திராயிருப்பு அரசு மருத்துவமனையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தக் கோரி நாளை மறுநாள் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. மதுரை மாநாட்டில் அரசியல் கட்சிகளுக்கு அழைப்பு இருக்காது. மாநாட்டுக்கு பின்னரே அரசியல் மற்றும் கூட்டணி நிலைப்பாடு குறித்து அறிவிக்கப்படும்” என்றார்.