

அமைச்சர் ரகுபதி |ஆளுநர் ஆர்.என்.ரவி
சென்னை: “தமிழர்களுக்கு எதிராக பேசுவதையே ஆளுநர் ஆர்.என்.ரவி வேலையாக வைத்திருக்கிறார். பாஜகவின் ஊதுகுழலாக முழங்குகிறார். திராவிட மாடல் அரசு யாருக்கும் எதிரானது கிடையாது” என அமைச்சர் ரகுபதி கருத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: “தமிழ்நாட்டில் பிஹாரிகள் அச்சுறுத்தப்பட்டனர். தமிழ்நாட்டில் மொழி சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன உள்ளிட்ட கருத்துகளை ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.
திராவிடம் என்பது கற்பனை என்றால், நம் தேசிய கீதத்தில் திராவிடம் இடம்பெற்றிருக்கிறது என்பது ஆளுநருக்கு தெரியாதா அல்லது அது வங்க மொழியில் இருப்பதால் அவரால் புரிந்துகொள்ள முடியவில்லையா என்பதை எங்களால் அறிந்துகொள்ள முடியவில்லை. பாஜகவின் ஊதுகுழலாக ஆளுநர் ரவி முழங்குகிறார். மத்திய அரசு தமிழை விட, சமஸ்கிருதத்துக்கு தான் அதிக நிதி ஒதுக்கியுள்ளது.
தமிழ்நாடு தனித்து நிற்கிறது என ஆளுநர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அவதூறு பரப்புவதற்காக அனுப்பப்பட்டவர் ஆளுநர் ரவி. தமிழ்நாடு தனித்து விடப்பட்டிருக்கிறது, யாருடனும் இணையவில்லை என தவறான தகவலை பரப்பி வருகிறார். தமிழ்நாடு தனித்து நிற்பதுபோல் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார். தேர்தல் வருகிறது என்பதற்காக ஆளுநர் இவ்வாறு குற்றம் சாட்டுகிறார்.
சீன போரின்போது, எங்களுக்கு திராவிட நாடு கோரிக்கை முக்கியம் இல்லை, இந்தியாதான் முக்கியம். இந்தியாவின் நலன்தான் முக்கியம் என சொன்ன ஒரே அரசியல் கட்சி திமுகதான்.
எந்தப் போராக இருந்தாலும், முதலில் இந்திய அரசுக்கு உறுதுணையாக இருப்பது திமுகதான். அப்படி இருக்கும்போது பிரிவினை வாதம் எல்லாம் இங்கே எப்படி வரும்?
இந்தியா ஒற்றுமையாக இருக்க வேண்டும்; அதுவே நமக்கு பலம் என நினைக்கும் கட்சி திமுக. தமிழகம் அனைத்து மாநிலங்களுடனும் நல்ல உறவில் தான் இருக்கிறது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பல மொழிகள், பல மாநிலங்கள் இணைந்ததே இந்தியா என இருக்கிறது.
தமிழக அரசு பஞ்சாப் முதல்வர், கேரள முதல்வர் உள்ளிட்ட பல மாநில முதல்வர்கள், குடியரசுத் தலைவர், பாதுகாப்புத் துறை அமைச்சர் என பலரையும் அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தி நாங்கள் இந்தியாவுடன் தான் இருக்கிறோம் என்பதை காட்டியுள்ளது.
ஒரு மாநிலத்தில் 2 அதிகார மையங்கள் கூடாது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும், மசோதாக்களுக்கு அனுமதி தராமல் கிடப்பில் போட்டால் நீதிமன்றத்தை அணுகலாம் என தெரிவிக்கிறது. மாநில அரசுதான் ஆள வேண்டும், ராஜ் பவனுக்கு ஆட்சி அதிகாரம் கிடையாது. உச்ச நீதிமன்றம் என்றுமே ஆளுநரை பாராட்டியது கிடையாது.
தமிழர்களுக்கு எதிராக பேசுவதையே ஆளுநர் ரவி வேலையாக வைத்திருக்கிறார். திராவிட மாடல் அரசு யாருக்கும் எதிரானது கிடையாது. சிறிது காலம் அமைதியாக இருந்த ஆளுநர் தற்போது, எதையாவது பேசிவருகிறார்.
தமிழகத்தை பொறுத்தவரை இந்தியை வைத்து மலியான அரசியல் செய்ய வேண்டிய தேவை இல்லை. இரு மொழிக் கொள்கைதான் எங்களின் கொள்கை. தமிழகத்தில் எந்த மொழிக்கும் அச்சுறுத்தல் இல்லை” என்று அவர் தெரிவித்துள்ளார்.