தமிழகம்

மறந்து போன ‘மது விலக்கு’ வாக்குறுதி: காணாமல் போன களப் போராளிகள்

எம்.கே.விஜயகோபால்

ஒரு காலத்தில் பூரண மதுவிலக்கு பிரதான கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய பங்கு வகித்த நிலையில், இந்தத் தேர்தலில் இலவச கவர்ச்சி வாக்குறுதிகளால் மங்கி போய் காணாமல் போகும் நிலையில் உள்ளது.

தமிழகத்தில் ஏற்படும் பெரும்பாலான சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றச் சம்பவங்களுக்கு மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களே காரணமாக உள்ளன. ஆண்டுதோறும் டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டதாக புள்ளி விவரங்களை காட்டும் திமுக அரசு, தெருவுக்கு தெரு, கிராமத்துக்கு கிராமம் எஃப்.எல்-2 எனப்படும், மனமகிழ் மன்றங்கள் என்ற பெயரில் மதுக்கடைகளை தொடர்ந்து திறந்து வருகிறது.

          

பொதுவாக தேர்தல் சமயங்களில் அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கை வெளியிடுவது வழக்கம். இதில், திமுக தனது தேர்தல் வாக்குறுதியை தேர்தல் கதாநாயகன் என்றும், ‘சூப்பர் ஸ்டார்’ என்றும் பெருமிதமாக கூறிக்கொள்வதுண்டு. அதன்படி 2016-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் திமுகவின் தேர்தல் அறிக்கையில் ‘மதுவிலக்கு’ என்ற தலைப்பில், ‘திமுக ஆட்சி அமைந்தால் தமிழகத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படும்’ என்று அறிவித்திருந்தது. மேலும், அந்த தேர்தல் பிரச்சாரத்தின்போது, “தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றவுடன் முதல் கையெழுத்து பூரணவிலக்கு” என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி சூளுரைத்தார். ஆனால், அந்தத் தேர்தலில் ‘படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும்’ என தேர்தல் வாக்குறுதி அளித்த அதிமுக வெற்றி பெற்று ஜெயலலிதா முதல்வரானார். இதைத் தொடர்ந்து, கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுகவின் தேர்தல் அறிக்கையில் பூரண மதுவிலக்கு என்பதற்குப் பதிலாக ‘படிப்படியாக மதுவிலக்கு’ என்றே இடம் பெற்றது.

இந்நிலையில், இந்த சட்டப்பேரவைத் தேர்தலில் படிப்படியாக மதுவிலக்கு என்ற பழைய பஞ்சாங்கமே அதிமுக தேர்தல் வாக்குறுதியில் இடம் பெற்றுள்ளது. ஆனால் திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் மதுவிலக்கு என்ற வார்த்தையே இடம்பெறவில்லை. மாறாக, திமுகவின் அறிக்கையில் மகளிர் உரிமைத் தொகை உயர்வு, மகளிருக்கு ரூ.8,000 கூப்பன் போன்றவையும், அதிமுகவில் மகளிர் உதவித் தொகை ரூ.2,000, வங்கிக் கணக்கில் ரூ.10,000, இலவச ஃப்ரிட்ஜ் போன்ற இலவச கவர்ச்சி அறிவிப்புகளே இடம் பெற்றுள்ளன.

திமுக, அதிமுகவுக்கு மாற்று நாங்கள்தான் என்று மார்தட்டும் நாம் தமிழர் கட்சி மட்டும் ‘மதுக்கடைகள் மூடப்படும்; அதற்கு பதில் கள்ளுக்கடைகள் திறக்கப்படும்’ என்கிறது. தவெக தலைவர் விஜய் மதுவிலக்கு குறித்த தனது நிலைப்பாட்டில் ஆழ்ந்த மவுனத்தை கடைபிடிக்கிறார்.

இதனால், தங்களது வாழ்நாட்களுக்குள் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை பார்த்துவிடலாம் என்ற எண்ணி காத்திருக்கும் காந்தியவாதிகள், பொதுநல தொண்டர்களுக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் கோடியை ஈட்டி தரக்கூடிய ஒரே நிலையான வருமானமான டாஸ்மாக் வருவாயை இழக்க பெரிய கட்சிகள் விரும்பவில்லை என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

அதிலும், ஒருகாலத்தில் ‘டாஸ்மாக் கடையை மூடு’ என்று தீவிரமாக மதுவிலக்குக்காக போராடிய போராளிகள் தற்போது எங்கிருக்கின்றனர் என்பதே தெரியவில்லை. அதிலும் குறிப்பாக அதிமுக ஆட்சியின்போது பாட்டுப் பாடியும் நூதன பிரச்சாரத்திலும் ஈடுபடும் சமூகப் போராளிகள் திமுக ஆட்சியின்போது தலைகாட்டுவதே இல்லை. திமுகவின் தேர்தல் அறிக்கையில் படிப்படியாக என்று பெயரளவுக்காவது மதுவிலக்கு குறித்த அறிவிப்பு இல்லாததற்கு காணாமல் போயிருக்கும் போராளிகள் ஒரு கண்டனம் கூட தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT