சென்னை: இஸ்லாமியர்களின் முக்கியப் பண்டிகையான ரம்ஜான் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்: இந்த புனித நாள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் வளமை அளிக்கட்டும். சமூகத்தில் சகோதரத்துவத்தை வளர்த்து, வளமான நாட்டை உருவாக்கும் பணியில் ஒற்றுமை வலுப்படுத்தட்டும்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: இஸ்லாமியர்களுக்கு என்றும் அரணாக திகழும் திமுக அரசு, அனைத்து நிலைகளிலும் சமூகநீதியை நிலைநாட்டி இருக்கிறது. ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு வாழ்த்துகள்.
அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி: மனிதகுல வழிகாட்டி நபிகள் நாயகத்தின் போதனைகளை மனதில் நிறுத்தி, உடலையும் உள்ளத்தையும் ஒருநிலைப்படுத்தி நோன்பிருந்து, ரம்ஜான் பண்டிகையை கொண்டாடும் இஸ்லாமியர்களுக்கு அனைத்து நலன்களையும் வழங்கிட இறைவனை பிரார்த்திக்கிறேன்.
தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை: ரம்ஜான் திருநாளில் கொடை வழங்கி, அனைவருடன் உணவருந்தி மகிழும் இஸ்லாமிய மக்களின் வாழ்வில் மகிழ்ச்சியும், ஏற்றமும் பெற வாழ்த்துகள்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: மக்களிடம் அன்பு, நல்லிணக்கம், சகிப்புத் தன்மை, சகோதரத்துவம், ஈகை உள்ளிட்ட நற்குணங்கள் பெருகவும், அமைதி, வளம், முன்னேற்றம் தழைக்கவும் உறுதியேற்போம்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ: ஏழை, எளிய மக்களுக்கு நன்கொடை வழங்கி, ஈதுப் பெருநாளில் ஈந்துவக்கும் மகிழ்ச்சியில் திளைக்கும் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்துகள்.
ஐயுஎம்எல் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீன்: ஒன்றே குலம் ஒருவனே தேவன், பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் உன்னத கொள்கைகளை நிலைநிறுத்தும் ரம்ஜான் வாழ்த்துகள்.
மேலும், தேமுதிக தலைவர் பிரேமலதா, தமாகா தலைவர்வாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தவாக தலைவர் தி.வேல்முருகன், ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து, தேசியலீக் மாநிலத் தலைவர் நாகூர் ராஜா, மஜக தலைவர் தமிமுன் அன்சாரி, தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்டோரும் வாழ்த்து கூறியுள்ளனர்.