

நயினார் நாகேந்திரன் |கோப்புப் படம்
“டெல்லியில் எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. தமிழகத்தில் நடப்பது எதுவுமே முதல்வருக்கு தெரியவில்லை” என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: தமிழகத்தில் மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பல்வேறு மொழி பேசுபவர்களும், வடமாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான தொழிலாளர்களும் வசித்து வருகின்றனர்.
மாநிலத்தின் ஒட்டுமொத்த மக்கள் தொகையில் சுமார் 25 சதவீதம் பேர் பிற மொழி பேசுபவர்களாக உள்ள நிலையில், அவர்களின் வாக்குகள் தங்களுக்குத் தேவையில்லை என முதல்வர் ஸ்டாலின் கருதுகிறாரா? பிற மொழிக்காரர்கள் தமிழகத்தில் இருக்கக் கூடாது என்ற ரீதியில் ஒரு மாநிலத்தின் முதல்வர் பேசுவது எந்த வகையில் நியாயம்?
தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் டெல்லிக் குச் செல்வதில் என்ன தவறுவந்துவிட்டது? டெல்லியில் வைத்து எவ்வித கூட்டணிப் பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை. அவர்கள் எதற்காக டெல்லி சென்றார்கள் என்ற உண்மை நிலவரமாவது முதல்வர் ஸ்டாலினுக்குத் தெரியுமா?
உண்மையில், முதல்வருக்குத் தமிழகத்தில் நடப்பது எதுவுமே தெரியவில்லை. அப்படித் தெரிந்திருந்தால், விளாத்திகுளத்தில் ஒரு பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருப்பாரா? மாநிலம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
முதல்வருக்கு அதுவும் தெரியவில்லை.சனிக்கிழமை (இன்று) மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தமிழகம் வருகிறார். அவர் வந்தவுடன், எங்கள் கூட்டணிப் பேச்சுவார்த்தையை நாங்கள் முறைப்படி தொடங்குவோம். நான் டெல்லிக்குச் செல்லவில்லை. மாறாக, பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர் தான் சென்னை வருகிறார். எனவே, எங்கள் தரப்புப் பேச்சுவார்த்தைகள் அனைத்தும் சென்னையில் தான் நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.