சென்னை: ‘மின் கட்டணக் கணக்கீட்டுப் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்கக்கூடாது’ என தமிழக அரசை பல்வேறு அரசியல் கட்சித் தலை வர்கள் வலியுறுத்தியுள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்ட அறிக்கை:
பாமக தலைவர் அன்புமணி: வீடுகளுக்கான மின்பயன்பாடு கணக்கீட்டுப் பணிகள் அடுத்த 6 மாதத்துக்கு தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக மின்வாரியம் அறிவித்துள்ளது கண்டனத்துக்குரியது. மின் கணக்கீட்டாளர் பணிக்கு ஒப்பந்தப் பணியாளர்களை நியமிக்கும் முடிவைக் கைவிட்டு, நிரந்தர பணியாளர்களை நியமிக்க வேண்டும்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன்: இது மின்கட்டண உயர்வு, முறைகேடுகள் போன்றவற்றுக்கே வழிவகுக்கும். வேலை வாய்ப்புக்காகப் பதிவு செய்து லட்சக்கணக்கானோர் காத்திருக்கும் நிலையில் ஆள் பற்றாக்குறை என்ற காரணத்தைக் கூறி, தனியார் நிறுவனங்களின் ஒப்பந்த முறைக்கு செல்வது ஏற்கத்தக்கதல்ல.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன்: தூய்மைப் பணிகள் தொடங்கி விமான நிலையம்வரை தனியாருக்கு தாரை வார்ப்பதில் முதல்வருக்கு ஏன் இவ்வளவு ஆர்வம்? மின்கணக்கீட்டாளர் பணிக்கு தனியார் ஒப்பந்த நிறுவனங்களின் மூலம் ஊழியர்களை நியமிக்க முயல்வது கண்டனத்துக்குரியது.
ஐஜேகே தலைவர் ரவிபச்சமுத்து: மின்கணக்கீட்டுப்பணியை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் முடிவை தமிழக அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர். இதேபோல் எஸ்டிபிஐ மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் உள்ளிட்டோரும் வலியுறுத்தியுள்ளனர்.