செப்.28-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் செல்கிறார் முதல்வர் விஜய்!

செப்.28-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் செல்கிறார் முதல்வர் விஜய்!
Updated on: 
1 min read

மதுரை: ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தொடங்கி வைக்க செப்.28-ம் தேதி காலை வரும் முதல்வர் விஜய், இந்த விழாவுக்கு முன்பாக காலையில் சமீபத்தில் குடமுழுக்கு விழா நடந்த மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நாளை மறுநாள் (செப்.28) முதல்வர் விஜய் தொடங்கி வைக்கிறார். அரசு ராஜாஜி மருத்துவமனை வளாகத்தில் விழா நடக்கும் பகுதி மற்றும் மகப்பேறு மருத்துவமனை கட்டிடம், அவசர புறநோயாளி பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் தூய்மைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை முதல்வரின் தனிப்பிரிவு பாதுகாப்பு எஸ்பி மதன் தலைமையிலான போலீஸார் மருத்துவமனை வளாகத்தில் பாதுகாப்பு பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

மதுரை விமான நிலையத்துக்கு சுமார் 11 மணிக்கு வருகை தரும் முதல்வர், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை கூட்டரங்கில் தாய்மாமன் தங்க மோதிர திட்டத்தை தொடங்கி வைத்து, சுமார் 25 குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கிறார். இந்த விழாவுக்கு முன்பாக முதல்வர் விஜய், சமீபத்தில் குடமுழுக்கு விழா நடந்த மீனாட்சி அம்மன் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கிறார்.

அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனை விழா, பிரசவ வார்டுக்குள் சென்று அன்றைய தினத்தில் பிறந்த குழந்தைகளுக்கு மோதிரம் அணிவிக்கிறார். இந்த விழா முடிந்ததும், அங்கிருந்து புறப்பட்டு மதுரை காந்தி அருங்காட்சியத்தை திறந்து வைத்து பார்வையிடுகிறார். பின்னர் அரசினர் சுற்றுலா மாளிகையில் ஓய்வெடுக்கிறார்.

மதுரை சுற்றுப் பயணத்தில் முதல்வர் செல்லும் இடங்கள் முழுவதும் உள்ள சாலையோரங்களில் பொதுமக்கள் நின்று அவரை வரவேற்கும் வகையில், இரும்புத் தடுப்புகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆலோசனையின் பேரில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மாநகர காவல் ஆணையர் ராஜேந்திரன் தலைமையிலான சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டு வருவதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

செப்.28-ல் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் செல்கிறார் முதல்வர் விஜய்!
பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலில் 12 பேர் உயிரிழப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in