“தேர்தலில் நேரடியாகப் போட்டியிட மாட்டோம்” என்று சொல்லி அரசியல் கட்சி ஆரம்பித்திருக்கும் ‘பலாப்பழ’ ஊர் தலைவர், அந்தக் கட்சியை இன்னொரு நபரிடம் இருந்து தான் ‘வாங்கி’ இருக்கிறாராம். தலைமைத் தேர்தல் ஆணைய வட்டாரத்தில் நட்பு வளையத்தை போட்டு வைத்திருக்கும் ‘சிவமான’ உச்ச நீதிமன்ற சட்டப்புள்ளி ஒருவர் தான் ‘பலாப்பழ’ ஊர் தலைவர் அறிவித்திருக்கும் கட்சியை தேர்தல் ஆணயத்தில் பதிவு செய்து வைத்திருந்தாராம்.
அவரது மனுவை பரிசீலனைக்கு எடுப்பதில் ஆணையம் தாமதம் செய்ததால், டெல்லி நீதிமன்றத்தில் அது தொடர்பாக வழக்குத் தொடர்ந்தாராம் சட்டப்புள்ளி. அதன் தீர்ப்பு பிப்ரவரி 17-ம் தேதி தான் வெளியானதாம். அதன் பிறகு தான் அவரது கட்சியின் பதிவு ஏற்கப்பட்டதாம்.
இதைத் தொடர்ந்து சட்டப்புள்ளியிடம் இருந்து அந்தக் கட்சியின் பெயரை ‘பலாப்பழ’ ஊர் தலைவர் தங்களுக்காக ‘வாங்கினாராம்’. இதே ரீதியில் தான், சொந்த வாரிசு கொடுக்கும் ‘சோதனைகளால்’ சோகத்தில் இருக்கும் ‘பழக்’ கட்சி தலைவரும் இன்னொரு வாடகைக் கட்சியை பிடித்து வைத்திருக்கிறாராம்.
“துரோகிகளுக்கு பாடம் புகட்டுவோம்” என்று சொல்லி தேவர் பூமியில் முழங்கி இருக்கும் ‘உடன்பிறவா சிஸ்டர்’ தரப்பில் இருந்தும் தங்களுக்கான கட்சியை பதிவு செய்வதற்கு லேட்டாக கோப்புகளைத் தூக்கிக் கொண்டு டெல்லிக்குப் போனார்களாம். ஆனால், இது இப்போதைக்கு ஆகும் வேலையில்லை என்று தெரிந்ததால், அவர்களும் இப்போது தங்களுக்கு வாகான வாடகைக் கட்சியை ‘வாங்கும்’ முயற்சியில் இறங்கி இருக்கிறார்களாம்.