சாதியப் பின்னணியுடன் இயங்கி வரும் சிம்மக் கட்சியின் தேசிய துணைப் பொறுப்பில் இருக்கும் ‘கதிரானவர்’, ஆளுக்கு முந்தி வாண்டடாக வண்டியில் ஏறிப் போய் இலைக் கட்சி தலைவரைச் சந்தித்து கூட்டணி ரயிலில் இடம் பிடித்தார். தங்களுக்காக ஹனிபீ மாவட்டத்தின் பாரம்பரியமான ‘பட்டி’ தொகுதி உள்ளிட்ட மூன்று தொகுதிகள் வேண்டும் என்ற விருப்பத்தையும் அப்போது இலைக் கட்சி தலைவரிடம் சொல்லிவிட்டு வந்தார். ஆனால், அதற்குப் பிறகு அந்தப் பக்கம் இருந்து எந்த அசைவும் இல்லையாம்.
தாமரைக் கட்சி தலைவர்களுடன் சேர்ந்து கூட்டணிக் கட்சி தலைவர்கள் கைதூக்கிய மதுராந்தகம் கூட்டத்தில் கூட ‘கதிரானவர்’ கலந்து கொள்ளவில்லை. இந்த நிலையில், சிம்மக் கட்சியின் யூத் விங் மாநிலத் தலைவராக இருக்கும் ‘வைகுண்டம்’ பிரமுகர், “இந்தத் தேர்தலில் நாங்கள் சூரியக் கட்சி கூட்டணியில் தான் போட்டியிடுவோம்” என்று திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறாராம். தான் போட்டியிடுவதற்காக தெற்கில் உள்ள ‘நல்லூர்’ மற்றும் ‘பட்டி’ என்று முடியும் தொகுதிகளை சூரியக் கட்சியிடம் கேட்டிருக்கிறாராம் வைகுண்டத்தார்.