தமிழகம்

மிஸ்டர் ‘மதி’ Vs ‘ராஜ’ப் புள்ளி | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

தனது மாவட்டத்தில் தானுண்டு தன் வேலையுண்டு என இருக்கும் ‘மதி’யான மாண்புமிகுவுக்கு சொந்தக் கட்சியின் மாவட்ட ‘ராஜ’ப் புள்ளி சோதனை மேல் சோதனைகளைக் கொடுக்கிறாராம். ‘மதி’யானவர் எந்த நிகழ்ச்சிக்குப் போனாலும் முதலில் மாவட்டப் புள்ளியின் கார் தான் வருகிறதாம். அவருக்குப் பின்னால் தான் ’மதி’ வர வேண்டுமாம்.

இந்த நிலையில், ரோட்டரி கிளப்பிலும் அங்கத்தினராக இருக்கும் மிஸ்டர் ‘மதி’, அண்மையில் தனது தொகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றுக்கு தனது கிளப் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்க ஏற்பாடு செய்தாராம். இதைக் கேள்விப்பட்டதும் விண்ணுக்கும் மண்ணுக்குமாக குதித்த மாவட்டப் புள்ளி, “என்னைக் கேட்காமல் எப்படி இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யலாம்?” எனக் கேட்டு எகிறினாராம்.

இதையடுத்து அந்த நிகழ்ச்சியையே ரத்து செய்துவிட்ட மிஸ்டர் ‘மதி’, இது விஷயமாக நேரடியாக துணையானவரிடம் போய் அழாத குறையாகப் புலம்பித் தீர்த்தாராம். மாவட்டப் புள்ளியால், தான் எப்படியெல்லாம் சிறுமைப்படுத்தப் படுகிறேன் என்பதை மிஸ்டர் ‘மதி’ சொன்னதைக் கேட்டு துணை யானவரும் துணுக்குற்றுப் போனாராம்.

இந்த நிலையில், நினைத்த நேரத்தில் துணையானவரை அவரது வீட்டில் போய் சந்திக்குமளவுக்கு அவரிடம் செல்வாக்குப் பெற்ற மாவட்டப் புள்ளி, அண்மையில் துணையானவரைச் சந்திக்க வீட்டுக்கு வருவதாகச் சொன்னாராம். ஆனால், “இனிமேல் எதுவாக இருந்தாலும் ஆபீஸ்ல வந்து பேசுங்க” என்று கறாராகச் சொல்லி அவர் தனது வீட்டுக்கு வருவதை தவிர்த்துவிட்டாராம் துணை.

SCROLL FOR NEXT