தமிழகம்

‘கந்தப்பெருமான்’ Vs ஆளும் சீனியர் மாண்புமிகு | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

மலைக்கோட்டை மாநகரில் இருக்கும் ‘கந்தப்பெருமான்’ பெயர் கொண்ட அந்த சூரியக் கட்சி எம்எல்ஏ-வுக்கும் மாநகரை கொடிகட்டி ஆளும் சீனியர் மாண்புமிகுவுக்கும் அடிக்கடி முட்டிக் கொள்ளும்.

பொதுவெளி என்றும் பாராது மாண்புமிகுவுக்கு எதிராக மடைதிறந்த வெள்ளமாய் மனக்குமுறலைக் கொட்டிவிடுவார் திருவாளர் ‘கந்தப்பெருமான்’. அடிக்கடி அண்ணாச்சி இப்படிக் கொந்தளிப்பதால் இம்முறை இவருக்கு சீட் கிடைக்காதபடி செய்வதைச் ‘சிறப்பாக’ செய்து விடுவார் மாண்புமிகு என மலைக்கோட்டை மக்கள் பேசிக் வந்தார்கள்.

          

இந்த நிலையில், குவாரி விவகாரத்தில் மீடியா மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தை வைத்து ‘கந்தப்பெருமானின்’ கலர் கனவுகளை எல்லாம் மொத்தமாய் கலைத்திருக்கிறார்கள். இந்தச் சம்பவத்தில் ‘கந்தப்பெருமானுக்கு’ எதிராக கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்படும் நிலையில், “குவாரி முறைகேடு காலங்காலமாக நடப்பது தானே... இப்போது இந்த விவகாரத்தைக் கிளப்பும்படி தூண்டிவிட்டது யார்?

‘கந்தப் பெருமானை’ கஷ்டத்தில் சிக்கவைத்து அதன் மூலம் அவருக்கான வாய்ப்பைத் தட்டிவிட நினைத்தவர்கள் செய்த சதி தான் இது” எனவும் சிலர் சந்தேகம் கிளப்புகிறார்கள். இதனிடையே, இனி நம்மை சொந்த மாவட்டத்தில் சோபிக்க விடமாட்டார்கள் என்ற முடிவுக்கே வந்துவிட்ட ‘கந்தப்பெருமான்’, பக்கத்தில் உள்ள மூன்றெழுத்து மாவட்டத்தில் ஏதாவது ஒரு தொகுதியைப் பிடிக்க அந்த மாவட்ட திமுக-வின் ‘திருப்பதி கடவுளாரிடம்’ மொத்தமாய் சரணாகதி அடைந்திருக்கிறாராம்.

SCROLL FOR NEXT