‘பூட்டு’ ஜில்லா தலைநகரை கடந்த இரண்டு தேர்தல்களாக இலைக் கட்சியே வசப்படுத்தி வைத்திருக்கிறது. இம்முறையும் அங்கே அந்தக் கட்சியின் சீனியரான ‘சுகர்’வாசனுக்கு பெரிதாக சிக்கல் ஏதும் இருக்காது என்கிறார்கள். வழக்கமாக இந்தத் தொகுதியை தோழர்கள் விரும்பிக் கேட்பார்கள்.
ஆனால், இம்முறை ஜில்லாவுக்கான டெல்லி பிரதிநிதியும் தாங்களாகவே இருப்பதால், ‘பூட்டு’ நகரில் மெனக்கிட்டு புல்-அப்ஸ் எடுத்து உடம்பைப் புண்ணாக்கிக் கொள்ள வேண்டாம் என நினைக்கிறார்களாம் தோழர்கள். ஒருவேளை, நின்றே ஆகவேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் ‘பூட்டு’ நகருக்குப் பதிலாக ‘பஞ்சாமிர்த’ நகரை கேட்கலாம் என்ற திட்டத்தில் இருக்கிறார்களாம்.
இதனால் ‘பஞ்சாமிர்த’ நகரில் சிட்டிங் மக்கள் பிரதிநிதியாக இருக்கும் சூரியக் கட்சி சீனியர் மாண்புமிகுவின் வாரிசு தவி தவிக்கிறாராம். கடந்த முறையே, “இவரை ‘பூட்டு’ நகரில் நிற்கச் சொல்லலாம்” என்று பிஹார் கிஷோர் பி பிளான் கொடுத்தாராம். ஆனால், இதிலுள்ள ரிஸ்க்கை தெரிந்து கொண்டு, ‘பஞ்சாமிர்த’ நகரிலேயே மூன்றாவது முறையாக களமிறங்கினாராம் வாரிசு.
இந்த நிலையில், இப்போது தோழர்களுக்கு ‘பஞ்சாமிர்த’ நகரைக் கொடுத்துவிட்டு நம்மை ‘பூட்டு’ நகருக்குப் போகச் சொல்லி ஒரேயடியாய் வண்டியை பூட்டிவிடுவார்களோ என அஞ்சுகிறாராம் புதல்வர். அந்தப் பயத்தில், “ ‘பூட்டு’ நகரை நீங்க வேணும்னா கேளுங்களேன்...” என்று பம்பரம் பார்ட்டிகளை சாட்டை இல்லாமலே சுற்றிவிட்டு பக்கத்து இலைக்கு பாசந்தி வைக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறாராம்.