தேனாம்பேட்டைக் கட்சியுடன் தேனிலவை முடித்துக் கொள்ளலாம் எனவும், அரசனை நம்பி புருசனைக் கைவிட வேண்டாம் எனவும் கதர் கட்சிக்குள் இரண்டு அணிகள் கொடிபிடித்து நின்றன. “அவர்கள் நம்மை விட்டு எங்கும் போகமாட்டார்கள்” என துணையானவர் பொதுவெளியில் கிச்சுக் கிச்சு மூட்டுமளவுக்கு இது தொடர்பான ஹாஸ்யங்கள் நாளொரு கட்சியும் பொழுதொரு கூட்டணியுமாக றெக்கை கட்டின.
கதர் கட்சியின் டெல்லி தலைமையில் உட்கார்ந்திருக்கும் ‘கோபாலமான’ தலைவர் நடிகர் கட்சியுடன் கூட்டணி வைத்தால் மலபார் தேசத்தில் தனக்குக் கிடைக்கும் அனுகூலங்களையும் ஆட்களை வைத்து ஆய்வு செய்து கொண்டிருந்தார். இவரது பேச்சுக்கு இசைவளிக்கும் நிலைக்கு கட்சியின் ‘இளம் தலைவரும்’ கிட்டத்தட்ட வந்துவிட்டதாகவும் தகவல் பரவ ஆரம்பித்தது. இதையெல்லாம் பார்த்துவிட்டு, தேனாம்பேட்டை கட்சியின் தலைவர், தனது மாப்பிள்ளையை டெல்லிக்கு ரகசியத் தூது அனுப்பினாராம்.
மாமாவுக்காக டெல்லிக்குப் பறந்த மாப்பிள்ளை, கதர் ‘அம்மா’வைச் சந்தித்து தமிழகத்தில் உலவும் கூட்டணி கதைகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று பரிவோடு கேட்டுக் கொண்டாராம். இதையடுத்தே கூட்டணிப் பேச்சுவார்த்தைக்கான குழுவை அமைத்து கூட்டணித் தலைமையைக் கூல்படுத்தியதாம் கதர் தலைமை.
இதனிடையே, தலைநகர் ‘மூவ்’களுக்காக, தான் இருக்கும்போது தன்னைத் தவிர்த்துவிட்டு ‘மாப்பிள்ளை சாரை’ டெல்லிக்கு அனுப்பி வைத்ததில் ‘மகள் வாரிசு’க்கு லேசான மன வருத்தமாம்.