“எடக்கானவரை முன்னிலைப்படுத்தும் மலர் கூட்டணியில் இருக்க மாட்டோம்” என்று திக்கெட்டும் பாடிவந்த குக்கர் தலைவர், இப்போது அந்தப் பாட்டை மியூட்டில் போட்டுவிட்டு மலர் கூட்டணியில் மகிழ்வோடு இணைந்துவிட்டார். இதன் பின்னணியில் மலர் கட்சி ‘மவுன்ட் தலைவரின்’ மதி நுட்பமும் இருக்கிறதாம்.
“உங்களைப் போலவே என்னாலும் ‘எடக்குப்’ பார்ட்டியை ஏற்க முடியவில்லை தான். இருந்தாலும் இப்போது வீரியத்தை விட காரியம் பெரிது. அதனால், இப்போதைக்கு கூட்டணிக்குள் வந்து முதல் காரியத்தை முடிக்கலாம். தேர்தலுக்குப் பிறகு நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம். அப்படி மாறும் போது, ‘நினைத்ததை முடிக்கலாம்’“ என்று யோசனை சொல்லித்தான் குக்கர் பார்ட்டியை உள்ளே இழுத்திருக்கிறாராம் மிஸ்டர் ‘மவுன்ட்’.
மலர் கூட்டணியில் குக்கர் பார்ட்டிக்கு 7 தொகுதிகள் வரை பேசப்படுகிறதாம். அதில் இரண்டு தொகுதிகளை தனது குடும்பத்துக்காக ஒதுக்கும் முடிவில் இருக்கிறாராம் குக்கர் தலைவர். அந்த கோட்டாவில் ஆண்டிபட்டி தொகுதியில் தானே களமிறங்கும் திட்டத்தில் இருக்கும் அவர், தஞ்சைப் பக்கம் ஒரு தொகுதியில் தனது வாழ்க்கைத் துணையை நிறுத்தும் யோசனையிலும் இருக்கிறாராம். ‘சின்னம்மா’வுக்கு சிக்காத வாய்ப்பு ‘வீட்டம்மா’வுக்காவது வாய்க்கட்டும் என நினைக்கிறார் போலிருக்கிறது.