இலைக் கட்சியின் ‘அவார்டு நகர்’ மாவட்டத்தின், திருப்பதி கடவுள் பெயர் கொண்ட புள்ளியானவர், தனது மாவட்டத்தில் தன்னைத் தவிர யாரும் தலைதூக்கிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறாராம். ஏற்கெனவே சென்னையில் அரசியல் செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பிய பாண்டிய ‘மன்னரை’ பொது இடத்தில் கண்டபடி வார்த்தைகளால் தாக்கினார்.
பாண்டிய ‘மன்னர்’ நாகரிகம் தெரிந்தவர் என்பதால் அதன் பிறகு அந்த வழி போகாமல் தானுண்டு தன் தொழில் உண்டு என இருக்கிறார். இவருக்கு ‘அவார்டு நகர்’ தொகுதியை எடக்கானவர் நிச்சயம் கொடுத்துவிடுவார் எனச் சொல்லப்படும் நிலையில், அடுத்ததாக வைகை ‘வெல்த்’ புள்ளிக்கு எதிராக ‘கோட்டை’ தொகுதியில் தனது விசுவாசியான பெயரிலேயே யோகத்தையும் சேர்த்து வைத்திருக்கும் ஒன்றியப் புள்ளி ஒருவரை தயார்படுத்துகிறாராம்.
ஏற்கெனவே, திருப்பதியாருக்கும் வைகை ‘வெல்த்’துக்கும் அவ்வளவாய் ஒத்துப் போகாது. இதனால் திருப்பதியாரின் மாவட்ட எல்லைக்குள் மறந்தும் மிதிக்காதபடி பார்த்துக் கொள்கிறார் வைகை ‘வெல்த்.’ இந்த நிலையில் தான் அவரது ‘கோட்டை’ தொகுதியில் தனது விசுவாசியான ‘யோகப்’ புள்ளியை விருப்ப மனு கொடுக்கவைத்திருக்கிறாராம் திருவாளர் திருப்பதியார்.