

பாமக நிறுவனர் ராமதாஸ்
சென்னை: அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரை பாமகவில் இருந்து நீக்கியுள்ளதாக கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
பாமகவில் ராமதாஸ், அன்புமணி இடையே மோதல் போக்கு தொடர்கிறது. இதனால் கட்சியினர் இரு பிரிவுகளாக செயல்பட்டு வருகின்றனர். பாமகவில் உள்ள 5 எம்எல்ஏக்களில் ஜி.கே.மணி, இரா.அருள் ஆகியோர் ராமதாஸுக்கு ஆதரவாகவும், வெங்கடேஸ்வரன், எஸ்.சதாசிவம், சி.சிவக்குமார் ஆகியோர் அன்புமணிக்கு ஆதரவாகவும் செயல்பட்டு வருகின்றனர். கட்சியில் இருந்து அன்புமணியின் ஆதரவாளர்களை ராமதாஸ் நீக்குவதும், ராமதாஸ் ஆதரவாளர்களை அன்புமணி நீக்குவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. அந்த வகையில் சமீபத்தில் ஜி.கே.மணி. இரா.அருளை கட்சியில் இருந்து அன்புமணி நீக்கினார்.
இந்நிலையில், அன்புமணி ஆதரவு எம்எல்ஏக்கள் 3 பேரை நீக்கி ராமதாஸ் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக நேற்று ராமதாஸ் பாமக பொதுச்செயலாளர் வெளியிட்ட அறிக்கை:
கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட எம்எல்ஏக்களிடம் பாமகவின் ஒழுங்கு நடவடிக்கை குழு விளக்கம் கேட்டு கடந்த ஜூலை 20-ம் தேதி அனுப்பட்ட கடிதத்துக்கு இதுவரை அவர்கள் எந்த பதிலும் அளிக்கவில்லை.
தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதால், எம்எல்ஏக்கள் சி.சிவக்குமார், எஸ்.சதாசிவம், எஸ்.பி.வெங்கடேஸ்வரன் ஆகிய மூவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பதவிகளில் இருந்தும் ஜன.12 முதல் முழுமையாக நீக்கப்படுகிறார்கள். பாமகவினர் யாரும் மேற்கண்ட மூவரிடம் எந்தவித கட்சி தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.