ஹீரோ கட்சியில் இருக்கும் எக்ஸ் ‘அதிகாரி’யானவர், லாரி மாவட்டத்தில் இருக்கும் ‘லைன்’ தொகுதியை தனக்காகத் தயார்படுத்துகிறாராம். தற்சமயம் மேங்கோ சிட்டியில் வசிக்கும் அந்த ’அதிகாரி’யின் ஜனன கிராமம் ‘லைன்’ தொகுதிக்குள் தான் வருகிறதாம்.
இதை வைத்து அங்கே ஆள், அம்பு, சேனைகளை தயார்படுத்துகிறாராம். இதுவரை அந்தத் தொகுதிக்குள் மூன்று ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி இருக்கிறாராம் ‘அதிகாரி’. இதையெல்லாம் வைத்து, “அய்யா இங்க தான் நிக்கப் போறாங்க” என்று அவருக்கு வேண்டப்பட்டவர்களே செய்திகளை பரப்பி வருகிறார்களாம்.
இதைக் கேட்டு ’ஆனந்தத்’படுவதற்கு பதிலாக கொதிப்பான கட்சியின் இன்னொரு தலைமையிடத்து தாசில்தார், “வேட்பாளர் யார் என்பதை எல்லாம் தலைவர் தான் அறிவிப்பார்” என அறிக்கை வெளியிட்டார். இந்த நிலையில், லாரி மாவட்டத்தின் முக்கிய பொறுப்பாளர் ஒருவர் ‘ஏடாகூட’ சர்ச்சையில் சிக்கியதை அடுத்து அவரைக் கட்சியிலிருந்தே நீக்கிவிட்டார்கள்.
அவருக்குப் பதிலாக புதிய பொறுப்பாளரை நியமிப்பதை ‘தொலைநோக்கு திட்டத்துடன்’ நிறுத்தி வைத்திருக்கிறாராம் ‘அதிகாரி’. புதிதாக யாரையாவது மாவட்டப் பொறுப்பில் நியமித்தால் அவர்கள் மூலம் தனது ‘லைன்’ தொகுதி கனவுக்கு காய்ச்சல் வந்துவிடுமோ என யோசிக்கும் ‘அதிகாரி’, தேர்தல் முடியும் வரை, நாமே அந்த மாவட்டத்துக்கான பொறுப்பாளராகவும் இருந்துவிட்டால் என்ன என நெருக்கமான வட்டாரத்தில் ஆலோசனை நடத்தி இருக்கிறாராம்.