தமிழகம்

‘கோட்டை’ தொகுதியும், மிஸ்டர் ‘விஜய’ம் கணக்கும் | உள்குத்து உளவாளி

செய்திப்பிரிவு

‘கோட்டை’ மாவட்டத்து இலைக் கட்சியின் ‘விஜய’மானவருக்கு, தனது ‘மலை’ தொகுதியைப் பற்றிய கவலையைவிட ‘கோட்டை’ தொகுதி யார் கைக்குப் போகுமோ என்பதில் தான் பெருங்கவலையாக இருக்கிறதாம்.

மக்களவைத் தேர்தலில் ‘மணல் கம்பெனி’யைச் சேர்ந்த ‘அய்யா’வை ‘மலைக்கோட்டை’ தொகுதியில் வம்படியாய் இழுத்துக் கொண்டு போய் நிறுத்தினார்கள்.

அப்போதே, “இம்முறை இங்கே ஜெயிக்காவிட்டாலும் பேரவைத் தேர்தலில் ‘கோட்டை’ தொகுதி உனக்குத்தான்” என்று உத்தரவாதம் அளித்திருந்தாராம் ‘விஜய’மானவர். அந்த வசனத்தை எடுத்துக் கொண்டு ‘அய்யா’ இப்போது ’கோட்டை’ களத்துக்கு வருகிறாராம்.

இவருக்குப் போட்டியாக, இலைக் கட்சியின் முன்னாள் ‘ஷாக்’ மணிக்கு நெருக்கமான பழனிக் கடவுளும் ‘கோட்டைக்கு’ மோதுகிறாராம். இருவருமே சவுண்டு பார்ட்டிகள் என்பதால், இவர்களில் யார் நின்று, வென்று வந்தாலும் அடுத்த கட்டத்துக்கு அணை கட்டுவார்கள் என்ற அச்சம் ‘விஜய’மானவருக்கு இப்போதே உள்ளுக்குள் உதைக்கிறதாம்.

அதனால், ‘கோட்டை’ தொகுதியை வம்பே இல்லாமல் தாமரைக் கட்சிக்கு தாரைவார்த்துவிட திட்டம் வகுக்கிறாராம். தாமரைக் கட்சியில் இருக்கும் ‘சந்திரமான’ மாவட்டப் புள்ளியும் ‘விஜய’மானவரும் இப்போது தொழில் ’தோழர்களாகவும்’ இருக்கிறார்கள். அதனால், தாமரைக் கட்சிக்கு தொகுதியை ஒதுக்கி அதன் மூலம் தனது ’தோழரை’ எம்எல்ஏ ஆக்கி கைக்குள் வைத்துக் கொள்ளலாம் என கணக்குப் போடுகிறாராம் வெவரமான மிஸ்டர் ‘விஜய’ம்.

SCROLL FOR NEXT